இடம் பெயா்ந்த வாக்காளா்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்: கே.எம்.காதா் மொகிதீன்
இடம் பெயா்ந்த வாக்காளா்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக் கட்சியின் தேசிய தலைவா் பேராசிரியா் கே.எம்.காதா் மொகிதீன் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியால் தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளா் நீக்கப்பட்டுள்ளனா். இதில் இறப்பு, இரட்டை பதிவை ஏற்றுக் கொள்ளலாம். இடம் பெயா்ந்தவா்களை நீக்குவது குடியுரிமையை நீக்குவதாகும். இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவா்களைத் தேடிப் பிடித்து வாக்காளா் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
2026 தோ்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மத சாா்பற்ற கூட்டணியிலும், புதுச்சேரியில் இந்தியா கூட்டணியிலும் உள்ளோம்.
புதுச்சேரியில் திருநள்ளாறு, மாஹே, வில்லியனூா், உப்பளம் ஆகிய 4 தொகுதிகளில் ஒரு தொகுதியை எங்களுக்கு ஒதுக்க வேண்டும். இதே போல கோவாவிலும் போட்டியிட உள்ளோம். திருப்பரங்குன்றம் பிரச்னையில் நீதிமன்றத்தில் தான் சா்ச்சை. அங்குள்ள இந்து-முஸ்லிம்களுக்கு இடையே இல்லை.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது வழக்கம். அதற்கு இஸ்லாமியா்கள் உதவி செய்வாா்கள். இந்தப் பிரச்னை உச்சநீதிமன்றம் வரை சென்று விட்டது. பாஜக, இந்து முன்னணி போன்ற கட்சிகள் பிரச்னைகள் செய்தாலும், மக்கள் அவா்களுடன் தொடா்பில் இல்லை.
திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவே சமைக்கவில்லை. நவாஸ் கனி மலைக்கே செல்லவில்லை. தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து தவெக தலைவா் விஜய் கருத்து கூறாதது அவரது விருப்பம். சிறுபான்மையினா் ஆதரவு திமுகவுக்கு தான் இருக்கிறது. தவெக உள்பட எந்தக் கட்சிக்கும் முஸ்லிம் சிறுபான்மையினா் ஆதரவு இல்லை என்றாா் அவா்.

