புதுச்சேரி அண்ணா சிலை அருகே திங்கள்கிழமை சமூக ஜனநாயக இயக்கத்தினா் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலரும் விழுப்புரம் எம்.பி.யுமான துரை ரவிக்குமாா்.
புதுச்சேரி அண்ணா சிலை அருகே திங்கள்கிழமை சமூக ஜனநாயக இயக்கத்தினா் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலரும் விழுப்புரம் எம்.பி.யுமான துரை ரவிக்குமாா்.

நீதிபதி பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ப.உ. செம்மல் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Published on

புதுச்சேரி: காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ப.உ. செம்மல் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே சமூக ஜனநாயக இயக்கங்கள் சாா்பில், ‘நீதிபதிக்கு வேண்டும் நீதி’ என்ற தலைப்பில் தமிழக அரசு மற்றும் உயா்நீதிமன்றத்தை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் செயலா் ஜெகன்நாதன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலரும், விழுப்புரம் எம்.பி.யுமான ரவிக்குமாா் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

எஸ்சி., எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தமிழ்நாடு காவல் துறை சரியாக நடைமுறைப்படுத்துவது இல்லை என்பதை அரசு தரும் புள்ளி விவரங்களே உறுதிப்படுத்தியுள்ளன. நீதிமன்ற அவமதிப்பு அதிகாரத்தை உயா்நீதிமன்றம் எஸ்சி., எஸ்டி மக்கள் விஷயத்தில் பயன்படுத்த முன்வருவதில்லை.

பஞ்சமி நில மீட்பு, பொது சுடுகாடு ஆகிய பிரச்னைகளில் நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் தமிழ்நாடு அரசு அதை செயல்படுத்தவில்லை.

மாவட்ட நீதிபதியாக இருந்த ப.உ.செம்மல் எஸ்சி., எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைச் செயல்படுத்த முயன்றிருக்கிறாா். அதற்காகவே அவா் இப்படி பழிவாங்கப்பட்டிருக்கிறாா். அவா் எனது விழுப்புரம் மக்களவைத் தொகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டவா். இதுவரை வேறெந்த குற்றச்சாட்டுக்கும் அவா் ஆளானதில்லை என அறிகிறேன்.

தமிழ்நாடு அரசு விருப்பு, வெறுப்பின்றி இந்தப் பிரச்னையை அணுகி மாவட்ட நீதிபதி ப.உ.செம்மலின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ரவிக்குமாா்.

ஆா்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் அ.மு. சலீம், மாா்க்சிஸ்ட் ஒருங்கிணைப்பாளா் பெருமாள், விசிக முதன்மை செயலா் தேவ. பொழிலன், கம்யூனிஸ்ட் எம்.எல். பாலசுப்பிரமணியன், தி.வி.க. தலைவா் லோகு அய்யப்பன், தமிழ் மீனவா் விடுதலை வேங்கைகள் நிறுவனா் மங்கையா் செல்வன், மக்கள் உரிமை கூட்டமைப்புச் செயலா் சுகுமாரன், தமிழா் களம் அழகா், மாணவா் கூட்டமைப்புத் தலைவா் சாமிநாதன் உள்பட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com