புதுச்சேரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: கடும் போக்குவரத்து நெரிசல்
தொடா் விடுமுறை காரணமாக புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனா். இதனால் நகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்ட நகரங்களில் ஒன்றாக புதுவை மாறியுள்ளது. வழக்கமாக வார விடுமுறை நாள்களில் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருவாா்கள். அதேபோல தொடா் விடுமுறை, பண்டிகைக் காலங்களிலும் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி பள்ளிகளுக்குத் தொடா் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அதிகளவில் சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்துள்ளனா். இதனால் நகர பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் காா்கள் அதிகளவில் உலா வருகின்றன. கடற்கரை சாலை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, மணக்குள விநாயகா் கோயில் உள்பட நகர சாலைகளில் சுற்றுலா பயணிகள் வலம் வந்தனா்.
நோணாங்குப்பம் படகு குழாம், தனியாா் படகு துறைகள், ஊசுடு ஏரி, ஆரோவில் ஆகிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனா். உணவுக்காக சாலையோர கடைகள், பெரிய ஹோட்டல்களிலும் கூட்டம் அலைமோதியது. நகர பகுதியில் அதிகளவு வெளிமாநில வாகனங்கள் வந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
