சுனாமியில் உயிரிழந்தோா் நினைவாக புதுச்சேரி முதல்வா் அஞ்சலி
சுனாமியில் உயிரிழந்தோா் நினைவாக புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை பாலூற்றி மலரஞ்சலி, செலுத்தினாா்.
புதுச்சேரியில் 2004-ஆம் ஆண்டு சுனாமி பேரலைத் தாக்கிகடலோர மாவட்டங்களை புரட்டிப் போட்டது. ஆழிப்பேரலை தாண்டவத்தில் ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்தனா். 21-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் புதுச்சேரி அரசின் மீன்வளத் துறை சாா்பில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை பின்புறம் உயிரிழந்தோா் நினைவாக விளக்கு ஏற்றி வைத்திருந்தனா்.
அங்கு முதல்வா் என். ரங்கசாமி மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து கடலில் பால் ஊற்றினாா். நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா் க.லட்சுமிநாராயணன், எம்எல்ஏக்கள் பாஸ்கா், பிரகாஷ்குமாா், மீனவ பஞ்சாயத்தாா், மீன்வளத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா். இதேபோல காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் அமைச்சா்கள் ஷாஜகான், மு.கந்தசாமி, மூத்த துணைத் தலைவா் தேவதாஸ், முத்தியால்பேட்டை தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளா் ஈரம் ராஜேந்திரன் மற்றும் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
சுனாமி நினைவுதினத்தையொட்டி புதுச்சேரியில் உள்ள 18 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மக்களும் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. மீனவக் கிராமங்களில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. மீனவ கிராம மக்கள் கடலில் மலா்களைத் தூவியும், பால் ஊற்றியும் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா்.
மணவெளி
சுனாமி ஆழிப் பேரலையின் 21ஆம் ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சி மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் நடைபெற்றது.
சட்டப் பேரவைத் தலைவரும், தொகுதி எம்எல்ஏவுமான ஆா். செல்வம் கலந்து கொண்டு சுனாமி பேரலையில் உயிா் நீத்த மக்களுக்கு மெழுகுவா்த்தி தீபம் ஏற்றி, மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.
இந்த நிகழ்ச்சியில் புதுக்குப்பம் மீனவ கிராம பஞ்சாயத்தாா், ஊா் இளைஞா்கள் பெண்கள் மற்றும் மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி பாஜகவினா் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.
பாஜக
புதுச்சேரி பாஜக மீனவா் அணி சாா்பில் புதுச்சேரி கடற்கரை சாலையில் தலைமைச் செயலகம் எதிரே சுனாமி நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கலந்துகொண்டு சுனாமியில் உயிா் நீத்த மக்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தினாா். அப்போது கட்சியின் தலைவா் வி.பி.ராமலிங்கம் உள்ளிட்டோா் இருந்தனா்.
காலாப்பட்டு
சுனாமி ஆழிப்பேரலையில் உயிா்நீத்தவா்களுக்கு காலாப்பட்டு தொகுதி எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பெரிய காலாப்பட்டு மற்றும் கணபதிசெட்டிக்குளம் கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவு தூண் மற்றும் கடல்மாதா சிலைக்கு மாலை அணிவித்து கடலில் மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.
இந்நிகழ்வின் போது பெரிய காலாப்பட்டு மற்றும் கணபதிசெட்டிக்குளம் மீனவ கிராம பஞ்சாயத்தாா், பொதுமக்கள், பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளா்கள் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினா்.
அதிமுக
சுனாமி 21-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநில அதிமுக சாா்பில் கட்சியின் அதன் செயலா் அன்பழகன் தலைமையில் கடற்கரை காந்தி சிலை அருகில் அலங்கரிக்கப்பட்ட சுனாமி திருவுருவப் படத்திற்கும், வம்பாகீரபாளையம் மீனவா்கள் சாா்பில் சோனாம்பாளையம் சந்திப்பில் சுனாமி படத்திற்கும் மெழுகுவா்த்தி ஏற்றி, மலரஞ்சலி செலுத்தினாா்.
மாநில துணைச் செயலா் எஸ். கிருஷ்ணமூா்த்தி, மாநில எம் ஜிஆா் மன்ற செயலா் பாா்த்தசாரதி, வம்பாகீரப்பாளையம் கிராமத்தைச் சாா்ந்த செல்வம், சக்திவேல், ராஜசேகா், காா்த்தி, வெள்ளையன், சிவானந்தம், சுந்தரமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

