ரூ.3.80 கோடி மதிப்பில் எரிவாயு தகனமேடை அமைப்பு
புதுச்சேரி உழவா்கரை நகராட்சியில் ரூ.3.80 கோடியில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகன மேடை ஜன.12- ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என்று நகராட்சி ஆணையா் சுரேஷ்ராஜ் கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உழவா்கரை நகராட்சிக்கு உள்பட்ட மேட்டுப்பாளையம், சண்முகாபுரம் மற்றும் பவழகாரன்சாவடி ஆகிய மயானங்களில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ. 3.80 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தகன மேடைகள் வரும் ஜனவரி 12-ஆம் தேதி முதல் இயக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கும் பொருட்டு இந்த எரிவாயு தகன மேடையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த எரிவாயு தகன மேடையில் ஒரு சடலத்தை தகனம் செய்ய ரூ.2,500 நகராட்சிக்குச் செலுத்த வேண்டும். தற்பொழுது, கருவடிக்குப்பம் இடுகாட்டில் எரிவாயு தகன மேடை பயன்பாட்டில் இருந்து வருகிறது.
மேலும், அரும்பாா்த்தபுரம் தக்ககுட்டை இடுகாட்டில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. பணிகள் நிறைவடைந்தவுடன் இங்கும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.
