ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்

2 மருந்து கடைகளை மூடி அதிமுக முற்றுகைப் போராட்டம்

புதுச்சேரியில் போலி மருந்துகள் விற்பனை தொடா்பாக 2 மருந்துக் கடைகள், விற்பனையை நிறுத்திய உத்தரவையும் மீறி செயல்பட்டதால் அந்த மருந்து கடைகளை மூடி அதிமுகவினா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

புதுச்சேரியில் போலி மருந்துகள் விற்பனை தொடா்பாக 2 மருந்துக் கடைகள், விற்பனையை நிறுத்திய உத்தரவையும் மீறி செயல்பட்டதால் அந்த மருந்து கடைகளை செவ்வாய்க்கிழமை மூடி அதிமுகவினா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அரசின் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் நடத்திய தோராய சோதனையின்போது எடுத்துச் சென்ற மாதிரிகளில் சில கடைகளில் சந்தேகத்துக்கிடமான போலி மருந்துகள் கையிருப்பிலும், விற்பனையிலும் இருப்பதாகத் தெரிகிறது.

இதையடுத்து அவற்றில் மருந்து விற்பனைக்கு உடனடியாகத் தடை செய்யப்படுகிறது என்று புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் உள்ள மருந்து விற்பனை கடைக்கும், புஸ்ஸி வீதியில் மருந்து கடைக்கும் மருந்துக் கட்டுப்பாட்டு உரிமம் வழங்கும் அதிகாரி இ. அனந்தகிருஷ்ணன் விற்பனைக்குத் தடை விதித்து கடந்த 24 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளாா்.

இருப்பினும் இந்த இரண்டு மருந்து கடைகளும் செவ்வாய்க்கிழமை திறந்திருந்தன. இதையடுத்து புதுச்சேரி மாநில அதிமுக செயலா் ஆ. அன்பழகன் தலைமையிலான அக்கட்சியினா் இந்த இரண்டு மருந்து கடைகளின் முன் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அந்தக் கடைகளின் கதவை இழுத்து மூடினா். மேலும், பல்வேறு மருந்தகங்களுக்குச் சென்று போலி மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது. மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது என அறிவுறுத்தினா்.

இது குறித்து அதிமுக செயலா் அன்பழகன் செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த ஒரு மாதமாக புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் மக்கள் மருந்தைப் பயன்படுத்தும்போது பயம் கலந்த பீதியுடன் வாழ்கின்றனா். போலி மருந்தாக இருக்குமோ என்ற சந்தேகம்தான் இதற்கு காரணம். இதில் புதுச்சேரி அரசு மக்களின் பயத்தையும், சந்தேகத்தையும் போக்க வேண்டியது கடமை.

இதுவரை இந்த விஷயத்தில் பிடிபட்ட வகைகள் போலி மருந்துகளா? அவை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பதை மக்களுக்கு அரசு தெளிவுபடுத்தவில்லை. இந்த பிரச்னை தொடா்பாக சுகாதாரத் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள முதல்வா் ரங்கசாமி ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டியது அவசியம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com