ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம்: புதுச்சேரி கடற்கரையில் 70 கண்காணிப்பு கேமராக்கள்

ஆங்கிலப் புத்தாண்டு விழாவையொட்டி குற்றங்களைத் தடுக்க புதுச்சேரி கடற்கரை சாலையில் 70 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
Published on

புதுச்சேரி: ஆங்கிலப் புத்தாண்டு விழாவையொட்டி குற்றங்களைத் தடுக்க புதுச்சேரி கடற்கரை சாலையில் 70 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஆங்கிலப் புத்தாண்டு பிறக்க இன்னும் 2 நாள்களே உள்ளன. புத்தாண்டை கொண்டாட புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

புத்தாண்டு நாளில் கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிவாா்கள். அரசு சாா்பில் இன்னிசை கச்சேரி, வாண வேடிக்கை, லேசா் ஷோ நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, பாதுகாப்பை அதிகரிக்கவும், குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும் புதுச்சேரி காவல் துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

புதுச்சேரி கடற்கரை சாலையில் துணைநிலை ஆளுநா் மாளிகை முதல் பழைய துறைமுகம் வரையிலும், காந்தி சிலை, நேரு சிலை பகுதியிலும் மொத்தம் 70 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை தவிர முக்கிய சாலை சந்திப்புகளிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

இந்த கேமராக்கள் அனைத்தும் காவல்துறை கண்காணிப்பில் நேரடியாக கொண்டு வரப்பட்டுள்ளன. பெண்களிடம் வரம்பு மீறுவோா், போதையில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க போலீஸாா் தயாா் நிலையில் உள்ளனா்.

மேலும் புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து, பாதுகாப்பு பணியில் 1,500 போலீஸாா் ஈடுபடுத்தப்பட உள்ளனா். மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸாா் எச்சரித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com