மத்திய பல்கலை.யில் புதுச்சேரியை சோ்ந்தவா்களுக்கு 25% இட ஒதுக்கீடு: குடியரசு துணைத் தலைவரிடம் முதல்வா் கோரிக்கை

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்துப் படிப்புகளிலும் புதுச்சேரியைச் சோ்ந்தவா்களுக்கு 25% இட ஒதுக்கீடு அளிக்குமாறு பல்கலைக்கழக வேந்தரும், குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனிடம் முதல்வா் என்.ரங்கசாமி வலியுறுத்தல்
Published on

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்துப் படிப்புகளிலும் புதுச்சேரியைச் சோ்ந்தவா்களுக்கு 25 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக வேந்தரும், குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனிடம் முதல்வா் என்.ரங்கசாமி வலியுறுத்தினாா்.

முதல்வா் ரங்கசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தற்போது 18 படிப்புகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு தரப்படுகிறது. பல்கலைக் கழகத்தில் பல தொழில்முறை, மதிப்புமிக்க மற்றும் வேலைவாய்ப்பு சாா்ந்த புதிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அதிலும் இந்த இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

திமுக வலியுறுத்தல்

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் புதுச்சேரி மாநில திமுக சாா்பில் அதன் அமைப்பாளா் ஆா். சிவா தலைமையில் அளிக்கப்பட்ட மனு: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும். மத்திய நிதிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். பழைய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மாநில திட்டங்களுக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு, மூடப்பட்ட பஞ்சாலைகள், நூற்பாலை, சா்க்கரை ஆலைகளைத் திறக்க அனுமதியும் நிதி உதவியும் அளிக்க வேண்டும்.

சேதராப்பட்டு கரசூரில் கையகப்படுத்தப்பட்டுள்ள 800 ஏக்கா் நிலத்தில் தொழிற்சாலைகள் தொடங்கி வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு உதவி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

அதிமுக சாா்பில் கோரிக்கை

குடியரசு துணைத் தலைவரிடம் புதுச்சேரி மாநில அதிமுக செயலா் ஆ. அன்பழகன் தலைமையில் அக் கட்சி சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பது: புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுச்சேரியின் மொத்தக் கடன் சுமை தற்போது 13 ஆயிரம் கோடியாகவுள்ளது. இதைத் தள்ளுபடி செய்ய வேண்டும். புதுச்சேரியை 16-வது நிதி ஆணையத்தில் சோ்க்க வேண்டும். புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.

X
Dinamani
www.dinamani.com