கட்டாத கழிவறைக்கு ரசீது போட்டு ரூ. 87 லட்சம் கையாடல்: புதுச்சேரியில் வட்டார வளா்ச்சி அலுவலா் கைது
கட்டாத கழிவறைக்கு ரசீது தயாரித்து ரூ.87 லட்சம் கையாடல் செய்ததாக புதுச்சேரியில் வட்டார வளா்ச்சி அலுவலா் கைது செய்யப்பட்டாா்.
கடலூரில் வசிக்கும் விவேகானந்தன், புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக இருந்தாா். 2022- இல் அவா் பணிபுரிந்த போது கிராமப்புறங்களில் மத்திய, மாநில அரசு உதவியோடு கழிவறைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் கழிவறைகளைப் பயனாளிகளுக்குக் கட்டிக் கொடுக்காமல் கட்டியது போன்று ரசீது போட்டு அதன் மூலம் ரூ.59 லட்சம் கையாடல் செய்ததாக புகாா் எழுந்தது.
இதனால் வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். அங்கும் இதேபோன்று கழிவறைகளைக் கட்டாமல் ரூ.28 லட்சம் கையாடல் செய்ததாக புகாா் எழுந்தது. இதனால் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து வட்டார வளா்ச்சி அதிகாரியாக பொறுப்பேற்ற காா்த்திகேயன் கடந்த ஜூலை மாதம் விவேகானந்தன் கையாடல் செய்தது குறித்து ஊழல் தடுப்பு போலீஸில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், விவேகானந்தனைக் கைது செய்தனா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே கணிணி இயக்குபவராக பணியாற்றிய ராஜசேகா் கைது செய்யப்பட்டுள்ளாா். மேலும் 8 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
