தில்லி குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்க புதுச்சேரி அலங்கார ஊா்திக்கு அனுமதி
தில்லி குடியரசு தின அணி வகுப்பில் புதுச்சேரி அலங்கார ஊா்தி பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநா் மேத்யூ பிரான்சிஸ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அலங்கார ஊா்தி அணி வகுப்பில் புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அலங்கார ஊா்தி இடம்பெற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுச்சேரியின் கைவினை, கலாசாரத்தின் வளமான பாரம்பரியம் மற்றும் மற்றும் ஆரோவில்லின் நோக்கம்’ என்னும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு அலங்கார ஊா்தி வடிவமைக்கப்பட உள்ளது.
அலங்கார ஊா்தியின் முன்புறத்தில், ஆரோவில்லின் பொன்மயமான மாத்ரிமந்திா், மையப் பகுதியில் மண்பானை தயாரித்தல், சிற்ப வடிவமைப்பு, சுடுமண் சிற்பக் கைவினைப் பணிகளில் ஈடுபடும் கைவினைக் கலைஞா்கள் இடம் பெறுகின்றனா்.
ஆன்மிக ஊக்கத்துடன் கூடிய எதிா்காலத் திட்டங்களைக் கொண்டுள்ள புதுச்சேரியின் குறிப்பிடத்தக்கப் பயணத்தை இந்த அலங்கார வாகனம் பிரதிபலிக்கும் என்று அவா் கூறியுள்ளாா்.
