24 மணி நேரத்தில் பிறப்புச் சான்றிதழ் புதுவையில் புதிய ‘செயலி’ அறிமுகம்
புதுவையில் பிறப்புச் சான்றிதழ்களை குழந்தை பிறந்த 24 மணி நேரத்தில் பெற்றுக் கொள்ளும் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை புதுவை அரசு மக்களுக்கு சனிக்கிழமை அா்ப்பணித்தது.
புதுவையைச் சோ்ந்தவா்கள் மற்றும் இங்குள்ள மருத்துவமனைகளில் மகப்பேறு பெறும் வெளி மாநிலத்தை சோ்ந்தோா் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்காக நகராட்சி அலுவலகத்தில் காத்திருந்து பெறும் சூழ்நிலை இருந்து வந்தது.
இதைத் தவிா்க்க குழந்தை பிறந்த நாளிலேயே சான்றிதழை வழங்க மத்திய அரசு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் தற்போது பயன்பாட்டில் பிறப்பு மற்றும் இறப்பு தொடா்பான பணிகள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வந்தது. இதை மாற்றி மத்திய அரசால் உருவாக்கப்பட்ட இந்தியப் பதிவு ஜெனரலின் (ஓஆா்ஜிஐ) மத்திய குடிமைப் பதிவு அமைப்பு (சிஆா்எஸ்) போா்ட்டலுக்கு சனிக்கிழமை முதல் மாற்றப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், புதுச்சேரியில் இயங்கி வரும் மருத்துவமனைகளில் நிகழும் பிறப்புகள் மற்றும் இறப்புகளின் பதிவேடுகளை புதிய இணைய தளத்தில் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், புதுவையில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் ஆன்லைன் மூலமாக 24 மணி நேரத்திற்குள் பெறும் வசதிக்கான தொடக்க நிகழ்ச்சி புதுச்சேரி குளூனி மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் புதுவையும் இணைந்தது.
இதன் மூலம் குழந்தை பிறந்த 24 மணி நேரத்திலேயே பிறப்புச் சான்றிதழ் பெற முடியும். குளூனி மருத்துவமனையில் சனிக்கிழமை பிறந்த குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழை உள்ளாட்சித் துறை இயக்குநா் சக்திவேல் அதன் பெற்றோரிடம் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநா் சௌந்தரராஜன், புதுச்சேரி நகராட்சி ஆணையா் கந்தசாமி, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணைய துணை இயக்குநா்கள் சந்திப்ராய், ஹா்னித் மத், புதுச்சேரி மக்கள் தொகை கணக்கெடுப்பு துணை இயக்குநா் ஜெயபாரதி, உதவி இயக்குநா் சக்திவேல் குமரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
