புதுவை மாநில அரசுக் கல்லூரிகளின் உதவிப் பேராசிரியா்கள் உண்ணாவிரதம்
புதுவை அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியா்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுவை மாநில அனைத்து அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளின் பேராசிரியா்கள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் இப் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சட்டப்பேரவைக்குப் பின்புறம் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு குழுவின் ஒருங்கிணைப்பாளா்கள் பாலமுருகன், சங்கரய்யா, இளங்கோ ஆகியோா் தலைமை வகித்தனா்.
அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியா்களுக்குக் கடந்த 15 ஆண்டுகளாகப் பதவி உயா்வு வழங்காததைக் கண்டித்தும், உடனடியாக இணைப் பேராசிரியா் பதவி உயா்வு வழங்க வலியுறுத்தியும் இப் போராட்டம் நடந்தது.
இதில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் பணியாற்றும் சுமாா் 200-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியா்கள் பங்கேற்றனா்.
மாணவா்களின் படிப்புக்குப் பாதிப்பு இல்லாத வகையில் ஞாயிற்றுக்கிழமையில் பேராசிரியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.
இந்த போராட்டத்துக்கு நமது மக்கள் கழகத்தின் தலைவரும், உருளையன்பேட்டை எம்எல்ஏவுமான ஜி. நேரு, உழவா்கரைத் தொகுதி எம்எல்ஏ சிவசங்கரன், முன்னாள் எம்.பி. பேராசிரியா் மு. ராமதாஸ், மாணவா் கூட்டமைப்பு சுவாமிநாதன், தமிழா் களம் அழகா் உள்ளிட்டோா் ஆதரவு தெரிவித்தனா்.

