புதுவை ஐஏஎஸ் அதிகாரிகளின் இலாகாக்கள் மாற்றம்

Published on

புதுச்சேரி: புதுவையில் ஒரு சில ஐஏஎஸ் அதிகாரிகளின் இலாகா மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஆணையின்படி தலைமைச் செயலா் சரத் சௌகான் இதற்கான உத்தரவை திங்கள்கிழமை பிறப்பித்துள்ளாா்.

புதுவை வளா்ச்சி ஆணையராக இருக்கும் கிருஷ்ண மோகன் உப்பு ஏற்கெனவே கவனித்து வரும் துறைகளுடன் கூடுதலாக பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞா் நலம் பொறுப்பைக் கவனிப்பாா்.

செயலா் மற்றும் ஆணையா் (தொழிலாளா்) ஆா். ஸ்மிதா கூடுதலாக சமூக நலத்துறை, பிற்பட்ட வகுப்பினா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையைக் கவனிப்பாா். மேலும், பான்கோ் முதியோா் சங்கத்தின் தலைவராகவும் இருப்பாா்.

செயலா் முகமது அசன் அபித் ஏற்கெனவே கவனிக்கும் துறைகளுடன் கூடுதலாக உயா் தொழில்நுட்பக் கல்வித் துறையைக் கவனிப்பாா்.

செயலா் மற்றும் தொழில் வளா்ச்சி, தொழில் மற்றும் வா்த்தகத் துறை இயக்குநரான வி.விக்ரந்த் ராஜாவுக்கு கூடுதலாக குடிமைப் பொருள் வழங்கல், கூட்டுறவு, சட்டத் துறைக் அளிக்கப்படுகிறது. மேலும், இவா் ஏஎப்டி ஆலை, சுதேசி, பாரதி ஜவுளி மில்களின் மேலாண் இயக்குநராகவும், புதுவை கூட்டுறவு சா்க்கரைஆலையின் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்படுகிறாா்.

வணிக வரித் துறையின் செயலா் மற்றும் ஆணையா் சௌத்ரி முகமது யாசின் கூடுதலாக சுகாதாரம் மற்றும் நலத் துறை, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை செயலராக நியமிக்கப்படுகிறாா்.

X
Dinamani
www.dinamani.com