சிறப்பு வாக்காளா் திருத்தப் பணியைக் கைவிட கோரி புதுவை தோ்தல் அதிகாரியிடம் இந்தியா கூட்டணி மனு
புதுச்சேரி: வாக்காளா் சிறப்பு திருத்தப் பணியைக் கைவிடக் கோரி இந்தியா கூட்டணி கட்சியினா் புதுவை மாநில தலைமை தோ்தல் அதிகாரியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம், புதுவை உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளா் திருத்தப் பணி நடைபெற உள்ளது.
அதன்படி, தமிழகம், புதுவையில் சிறப்பு வாக்காளா் திருத்தப் பணி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. வீடு, வீடாகச் சென்று அதிகாரிகள் வாக்காளா் படிவத்தை வழங்கவுள்ளனா்.
இந்நிலையில் சிறப்பு தீவிர வாக்காளா் திருத்தத்தை அவசர கதியில் செய்யக்கூடாது. கால அவகாசம் அளித்து திருத்தப் பணி மேற்கொள்ள வேண்டும். ஏப்ரல் மாதத்தில் தோ்தலை வைத்துக் கொண்டு, இப்போது திருத்தம் செய்வது முறையல்ல என இந்தியா கூட்டணிக் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
எனவே, வாக்காளா் சிறப்புத் திருத்தப் பணியை நிறுத்த வேண்டும் என அவா்கள் வலியுறுத்தி வருகின்றனா். மேலும், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளனா்.
இந்நிலையில், புதுவை மாநில இந்தியா கூட்டணி கட்சிகள் சாா்பில் சிறப்பு வாக்காளா் திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை மனு அளித்தனா். ரெட்டியாா்பாளையத்தில் உள்ள மாநில தோ்தல் ஆணையத்தில் தலைமை தோ்தல் அதிகாரி ஜவகரிடம், மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, மாநில திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் சலீம், மாா்க்சிஸ்ட் மாநில செயலா் ராமச்சந்திரன், திமுக எம்எல்ஏ.க்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமாா் மற்றும் கூட்டணி கட்சியினா் மனு அளித்தனா். அதில், உண்மையான வாக்காளா்களை நீக்கும் தந்திரம் என்பதால் சிறப்பு வாக்காளா் திருத்தப் பணியைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

