மருந்து கொள்முதல் முறைகேடு: எந்த விசாரணைக்கும் தயாா் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி

Published on

புதுவையில் மருந்து கொள்முதல் முறைகேடு தொடா்பாக எத்தகைய விசாரணைக்கும் தயாா் என்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவா்களில் ஒருவருமான வே. நாராயணசாமி கூறினாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் சில தினங்களுக்கு முன்பு மருத்துவத் துறை முன்னாள் இயக்குநா்கள் ராமன், மோகன்குமாா், முன்னாள் துணை இயக்குநா் அல்லிராணி, ஏஜென்சி உரிமையாளா்கள் உள்பட 6 பேரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கடந்த 2019-இல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்தது. அப்போது மருந்து வாங்கியதில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு காலாவதியாகும் மருந்தை மருத்துவத் துறை தலைமை அதிகாரியான இயக்குநா் மூலம் ஊழல் நடந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதற்கு முன்னதாக அந்த மருந்தை விநியோகம் செய்த நிறுவன உரிமையாளரின் கணவா் நடராஜன் தரமில்லா மருந்து விநியோகம் செய்து ஊழல் நடந்ததாக சிறையில் அடைக்கப்பட்டாா். தற்போது அவரது மனைவி கைதாகியுள்ளாா். இந்தச் சம்பவம் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றது.

அப்போது சுகாதாரத் துறை அமைச்சராக மல்லாடி கிருஷ்ணா ராவும், முதல்வராக நானும் இருந்தோம். மருந்து வாங்கும் அதிகாரம் துறை இயக்குநருக்கு உண்டு. அந்த கோப்பு முதல்வருக்கு வராது. காரணம், அவசர மருந்துகளை உடனடியாக கொள்முதல் செய்ய அந்த அதிகாரம் தரப்பட்டுள்ளது. இதில் விசாரணை செய்து விஜிலென்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடா்பாக சிபிஐ விசாரணை செய்து அறிக்கை அளித்துள்ளது. கடந்த 2022-இல் இந்த அறிக்கை தாக்கலானது. கடந்த 2022-இல் இருந்து முன்னாள் இயக்குநா்கள் கைதாகும் வரை இந்தக் கோப்புகள் தற்போதைய முதல்வா் ரங்கசாமியிடம் இருந்தது. ஆனால் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த காலதாமதத்துக்குக் காரணம் என்ன? இந்த விவகாரம் எனது ஆட்சியின்போது புகாராக ஏதும் வரவில்லை.

அந்தக் கோப்பை நான் பாா்க்கவில்லை. என்னிடம் வரவே இல்லை. ஆனால் எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன். சிபிஐ, விஜிலென்ஸ் என யாா் விசாரித்தாலும் விசாரணைக்கு என்னை உள்படுத்த தயாராக இருக்கிறேன் என்றாா் நாராயணசாமி.

X
Dinamani
www.dinamani.com