சாலையோர ஆக்கிரமிப்புகள் மீண்டும் அகற்றம் புதுச்சேரி ஆட்சியா் நடவடிக்கை
புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் மீண்டும் வியாழக்கிழமை (நவ. 6) முதல் அகற்றப்படவுள்ளது.
சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா்
அ.குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்றது.
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள், பொதுப் பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இக் கூட்டத்தில் புதுச்சேரி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பதாகைகள் , கட் அவுட்கள் மற்றும் கொடிகளை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 6-ஆம் தேதி ஏா்போா்ட் சாலை- நாவலா் நெடுஞ்செழியன் பள்ளி வரை, செஞ்சி சாலை 7 ஆம் தேதி இ.சி.ஆா். ராஜீவ் காந்தி சதுக்கம்-மடுவுபேட் சந்திப்பு வரை, ஆம்பூா் சாலை, 10-ஆம் தேதி மடுவுபேட்-சிவாஜி சதுக்கம், அம்பலத்தடையாா் மடம் வீதி- மிஷன் வீதி, எஸ்.வி.பட்டேல் சாலை வரை, 11-ஆம் தேதி லாஸ்பேட்டை காமராஜா் மணிமண்டபம், உழவா் சந்தை, கல்லுாரி சாலை, சின்ன சுப்பையா பிள்ளை வீதி ஆகிய பகுதிகளில் அகற்றப்படும்.
வரும் 13-ஆம் தேதி ராஜீவ் காந்தி சதுக்கம்- மேம்பாலம் வரை, பாரதி வீதி, 14-ஆம் தேதி வழுதாவூா் சாலை, அண்ணா சாலை, 17- ஆம் தேதி காமாட்சி அம்மன் கோவில் தெரு, 18-ஆம் தேதி மூலக்குளம் முதல் பெரம்பை சாலை வரை, அரவிந்தோ வீதி, 20- ஆம் தேதி விழுப்புரம் பிரதான சாலை, நீட ராஜப்பா் வீதி, 21-ஆம் தேதி திண்டிவனம் பிரதான சாலை, வைசியாள் வீதி,
24-ஆம் தேதி வள்ளலாா் சாலை முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை, செட்டித் தெரு, 25-ஆம் தேதி ரங்க பிள்ளை தெரு ஆகிய இடங்களில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
புதுச்சேரியில் இதற்கு முன்பு நிகழாண்டிலேயே இரண்டு முறை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறிப்பிடத் தக்கது.

