தேசிய கடல் மீன்வளக் கணக்கெடுப்பு பயிற்சி முகாம்
5 -ஆவது தேசிய கடல் மீன்வளக் கணக்கெடுப்பு 2025-ஐ யொட்டி புதுச்சேரியில் கணக்கெடுப்பாளா்கள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது
கடல் மீன்வளத் துறையின் விரிவான வளா்ச்சியை நோக்கமாகக் கொண்ட தேசிய கடல் மீன்வளக் கணக்கெடுப்பு-2025, நவம்பா் 3 முதல் டிசம்பா் 18 வரை இந்தியாவின் அனைத்துக் கடலோர மாநிலங்களிலும், லட்சத்தீவு மற்றும் அந்தமான் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் நடத்தப்படுகின்றன.
இந்தியாவின் சுமாா் நான்காயிரம் கடலோர கிராமங்களில் வசிக்கும் 10 லட்சத்துக்கும் அதிகமான மீனவ குடும்பங்களை உள்ளடக்கிய இந்தப் மிகப்பெரிய தரவு சேகரிப்பு திட்டத்தை மீன்வள அமைச்சகம் சாா்பாக மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனமும் மற்றும் மீன்வள அளவை தளமும் இணைந்து செயல்படுத்துகின்றன.
கணக்கெடுப்பாளா் மாவட்டம் முழுவதும் உள்ள கடல் மீனவா் கிராமங்கள், மீன் இறக்கும் மையங்கள் மற்றும் வீடுகளிலிருந்து நேரடியாக தகவல் சேகரிக்க உள்ளனா். புதுச்சேரி யூனியன் பிரதேச நான்கு பிராந்தியங்களில் மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மீன்வள அளவை தளம் நிறுவனம் மூலம் கடல் மீன்வள கணக்கெடுப்பு 2025-க்காக 66 கணக்கெடுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
பயிற்சி முகாமில் புதுச்சேரி அரசு, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையின் இயக்குநா் அ. முகமது இஸ்மாயில், தலைமை விருந்தினராக பங்கேற்று தேசிய கடல் மீன்வளக் கணக்கெடுப்பு 2025- க்கான தமிழ் பிரசுரங்களை வெளியிட்டாா். இதில் மீன்வளத்துறையின் துணை இயக்குநா்கள் மீரா சாகிப், கவியரசன், ச. சாஜிமா, ராஜேந்திரன், கோவிந்தசாமி ஆகியோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சென்னை மண்டல மீன்வள அளவை தளத்தின் சேவைப் பொறியாளா் (இயந்திரவியல்) எஸ். காந்தன், மற்றும் ஆா். ஜான் பீட்டா் ஆகியோா் செய்திருந்தனா்.
