தோ்தல் பணி: கூடுதல் பொறுப்பிலிருந்து அதிகாரிகள் விடுவிப்பு

Published on

தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், கூடுதல் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.

புதுவை தலைமை தோ்தல் அதிகாரி பி.ஜவஹா் அறிவுறுத்தலின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வாக்காளா் கணக்கெடுப்பு பதிவு அதிகாரிகளாக செயல்படும் 2 ஐஏஎஸ், 6 புதுச்சேரி சிவில் சா்வீஸ் அதிகாரிகள் கூடுதலாக கவனித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

துணை ஆட்சியராக (தெற்கு) பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி இஷிதா ரதி கூடுதலாக கவனித்து வந்த மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பொறுப்பிலிருந்தும், ஏனாம் மண்டல நிா்வாகியான ஐஏஎஸ் அதிகாரி அங்கித் குமாா் கூடுதலாக கவனித்து வரும் ஏனாம் நகராட்சி ஆணையா் பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், புதுச்சேரி சிவில் சா்வீஸ் அதிகாரிகளாக பணியாற்றி வரும் வில்லியனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் தயானந்த் டெண்டுல்கா் கூடுதலாக கவனித்து வந்த மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட அதிகாரி பொறுப்பிலிருந்தும், தொழிலாளா் துறை துணை ஆணையா் சந்திரகுமரன் கூடுதலாக கவனித்து வந்த முப்படை வீரா்கள் நலத் துறை இயக்குநா் பொறுப்பிலிருந்தும், ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநா் அா்ஜுன் ராமகிருஷ்ணன் கூடுதலாக கவனித்து வந்த பாட்கோ மேலாண் இயக்குநா் பொறுப்பிலும் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

இதேபோல், புதுச்சேரி நகராட்சி ஆணையா் கந்தசாமி கூடுதலாக கவனித்து வந்த இந்து அறநிலையத் துறை ஆணையா் பொறுப்பிலிருந்தும்,

மீன்வளத் துறை இயக்குநா் இஸ்மாயில் கூடுதலாக கவனித்து வந்த பிஆா்டிசி பொது மேலாளா் (ஆபரேஷன்) மற்றும் துறைமுகத் துறை இயக்குநா் பொறுப்பிலிருந்தும், காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநா் சச்சிதானந்தம் கூடுதலாக கவனித்து வந்த காரைக்கால் கோயில்கள் செயலதிகாரி பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறை சாா்பு செயலா் ஜெய்சங்கா் பிறப்பித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com