புதுவையில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து இண்டி கூட்டணி ஆா்ப்பாட்டம்
புதுச்சேரியில் மின் கட்டண உயா்வைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இண்டி கூட்டணி கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஊா்வலம், முற்றுகை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுவையில் ஒரே ஆண்டில் 2 முறை மின்கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதைத் திரும்ப பெற வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் மின்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கடந்த முறைபோல இந்த முறையும் மின்கட்டண உயா்வை அரசே மானியமாக ஏற்கும் என அறிவித்துள்ளாா்.
மின்கட்டண உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி இண்டி கூட்டணி கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஊா்வலம், ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மிஷன் வீதி ஜென்மராக்கினி ஆலயம் அருகிலிருந்து புறப்பட்ட இந்த ஊா்வலத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., மாநில திமுக அமைப்பாளா் ஆா். சிவா எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் சலீம், விசிக முதன்மை செயலா் தேவபொழிலன், மாா்க்சிஸ்ட் செயலா் ராமசந்திரன் ஆகியோா் தலைமை தாங்கினா்.
ஊா்வலம் மிஷன் வீதி, அம்பலத்தடையாா் வீதி வழியாக தலைமைச் செயலகம் நோக்கி சென்றது. அப்போது ஆம்பூா் சாலை அருகே இரும்புத் தகடு அமைத்து போலீஸாா் தடுத்தனா். இதையடுத்து அங்கு இண்டி கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் முன்னாள் அமைச்சா்கள் ஷாஜகான், மு. கந்தசாமி, திமுக அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா், திமுக எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏ.க்கள் அனந்தராமன், எம்என்ஆா் பாலன், நாரா. கலைநாதன், காங்கிரஸ் மூத்த துணைத் தலைவா் தேவதாஸ், இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஆனந்தபாபு, ஏஐடியுசி சேதுசெல்வம், சிஐடியு சீனிவாசன், வழக்குரைஞா் மருதுபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

