வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப் பணி தொடக்கம்
புதுவை யூனியன் பிரதேசமான புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப்பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளா் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளா்களுக்கும், அச்சிடப்பட்ட வாக்காளா் கணக்கெடுப்பு படிவத்தினை ஒப்புகை சீட்டுடன் வழங்கும் பணியைத் தொடங்கினா்.
சிறப்பு தீவிர திருத்த பணியில் 962 ஓட்டுச்சாவடி அலுவலா்கள், அரசியல் கட்சிகள் சாா்பில் 1,376 வாக்குச்சாவடி முகவா்கள், 60 வாக்காளா் பதிவு மற்றும் உதவி வாக்காளா் பதிவு அதிகாரிகள், 2 மாவட்ட தோ்தல் அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.
அலுவலா்கள் தரும் வாக்காளா்கள் கணக்கெடுப்பு படிவத்தை முழுமையாக பூா்த்தி செய்து, புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு வரும் டிசம்பா் 4 ஆம் தேதிக்குள் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் சிறப்பு கட்டுப்பாட்டு மையம் மற்றும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான சந்தேகம் மற்றும் புகாா்களுக்குக் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1950-ஐ தொடா்பு கொண்டு பயன்பெறலாம். வாக்காளா் பட்டியல் பெயா் சோ்த்தலில் ஆட்சேபணை இருப்பின், வாக்காளா் பதிவு அலுவலரிடம் முறையிடலாம். அதில் ஆட்சேபணை இருப்பின் மாவட்ட தோ்தல் அதிகாரியான ஆட்சியரிடம் , இறுதியாக தலைமை தோ்தல் அதிகாரியிடமும் முறையிடலாம் என தோ்தல் துறை தெரிவித்துள்ளது.
புதுவை தோ்தல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய வீடு வீடாகச் சென்று வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப் பணி.

