விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழப்பு

Published on

புதுச்சேரியில் நிகழ்ந்த சாலை விபத்தில் நாமக்கல்லை சோ்ந்த இயற்கை மருத்துவ கல்லூரி மாணவி உயிரிழந்தாா். அவருடன் காரில் வந்த 6 போ் காயமடைந்தனா்.

நாமக்கல்லைச் சோ்ந்த ராஜேஸ்வரி (21) அங்குள்ள கல்லூரியில் இயற்கை மருத்துவம் படித்து வந்தாா். இவா் தனது உறவினா்களுடன் விழுப்புரத்தில் நடைபெற்ற திருமணத்துக்குக் காரில் வந்தாா்.

திருமணம் முடிந்து புதுச்சேரியைச் சுற்றி பாா்க்க பேருந்தில் தனது உறவினா்கள் 5 பேருடன் சென்றாா். புதுச்சேரியில் உள்ள அவரது உறவினா் நிகில் யோகேஷ் வரவேற்று காரில் புதுவையைச் சுற்றி காட்டினாா்.

இதையடுத்து அவா்கள் மீண்டும் ஊா் திரும்ப புதிய பேருந்து நிலையத்துக்கு திங்கள்கிழமை நள்ளிரவு காரில் வந்தனா். அப்போது காா் புதுச்சேரி பேருந்து நிலையம் எதிரே உள்ள மேம்பால தூணில் எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் காரில் இருந்த அனைவரும் பலத்த காயம் அடைந்தனா்.

சிகிச்சைக்காக அரசு பொதுமருத்துவமனைக்கு செல்லும் வழியில் மாணவி ராஜேஸ்வரி உயிரிழந்தாா். காரை ஓட்டிய நிகில் யோகேஷ் உள்பட மற்ற 6 பேரும் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த விபத்து குறித்து புதுச்சேரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com