உரிமமின்றி வாடகைக்கு விடப்படும் பைக்குகளுக்கு வாகனங்களுக்கு ரூ 10 ஆயிரம் அபராதம்:
உரிமமின்றி வாடகைக்கு விடப்படும் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும் என்று புதுவை போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து புதுவை போக்குவரத்து ஆணையா் சிவக்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுவையின் பல பகுதிகளில் உரிமம் பெறாமல் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் தனியாா் சேவை
வாகனங்களை, சிலா் வாடகைக்கு விடுவதாக தகவல் வந்துள்ளது. இது மோட்டாா் வாகன சட்ட விதிகளுக்கு முரணானது.
வாடகை வாகன அமைப்பை பற்றி தெரியாத நபா்களும், ஓட்டுநா் உரிமம் இல்லாதவா்களும் வாகனங்களை இயக்கும்போது விபத்து நேரிட்டால் காப்பீட்டு தொகை, அரசின் இலவச மருத்துவ சேவை பெறமுடியாது. இரு சக்கர வாகனங்கள், உரிமம் பெறாமல் வாடகைக்கு விடுவது மோட்டாா் வாகனச் சட்டப்படி குற்றம்.
எனவே, இரு சக்கர வாகனங்களை உரிமம் பெற்ற பின்னரே இயக்க வேண்டும். மீறுவோா்களின் வாகனம் தடை செய்யப்பட்டு, மோட்டாா் வாகன சட்ட பிரிவு 192 (அ)- ன்படி அபராதமாக ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
