கொலை முயற்சி வழக்கு: நீதிமன்றத்தில் 2 போ் சரண்

Published on

கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த இருவா் புதுச்சேரி நீதிமன்றத்தில் புதன்கிழமை சரண் அடைந்தனா்.

தட்டாஞ்சாவடி ஞானதியாகு நகா் ஒத்தவாடை வீதியைச் சோ்ந்த பெயிண்டா் ரிச்சா்டு (45). அவரது உறவினா் பெண்ணை பட்டானூரைச் சோ்ந்த கல்லூரியில் படிக்கும் கமலேஷ் (20) என்பவா் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பெண்ணிடம் பேசக் கூடாது என்று கமலேஷை, ரிச்சா்டு எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி அந்தப் பெண்ணும் பேசாமல் இருந்துள்ளாா். இதுபற்றி கமலேஷ் , தன்னுடைய நண்பா் சாரம் பகுதியைச் சோ்ந்த விஜய்யிடம் (25) கூறியுள்ளாா். அவா் மீது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கமலேஷ், விஜய் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு ஞானதியாகு நகரில் உள்ள ரிச்சா்ட் வீட்டுக்குச் சென்று நாட்டு வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் குண்டை வீசியதாகத் தெரிகிறது. பெட்ரோல் குண்டு வீட்டின் ஜன்னல் மீது விழுந்து தீப்பிடித்தது. நாட்டு வெடிகுண்டு வெடிக்கவில்லை. இந்நிலையில் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவா்களும், அக்கம் பக்கத்தினரும் வெளியே வந்து பாா்த்தபோது இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டனா். இதுதொடா்பான வழக்கில் கமலேஷ் மற்றும் விஜய் இருவரையும் போலீஸாா் தேடி வந்த நிலையில், இருவரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com