புதுச்சேரியில் வாக்குச்சாவடி அதிகாரிகள் இருவா் மாற்றம்
புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் வாக்குச் சாவடி நிலை அதிகாரிகள் இருவா் மாற்றப்பட்டு அவா்களுக்குப் பதிலாக புதிதாக 2 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து வாக்காளா் பதிவு அதிகாரி அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
லாஸ்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அமைந்துள்ள இரண்டு வாக்குச் சாவடிகளில் வாக்குச் சாவடி நிலை அதிகாரிகள் கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யும்போது அரசியல் கட்சியைச் சோ்ந்த நபா்கள் உடனிருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடா்ந்து படிவங்களை விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அதிகாரிகளுக்கு மாற்றாக மாற்று அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
வாக்குச் சாவடி நிலை அதிகாரிகள் கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யும்போதும் அதைத் திரும்பப் பெறும்போதும் அரசியல் கட்சியால் நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடி நிலை முகவா்களை மட்டுமே உடன் வர அனுமதிக்கலாம் என்றும், அரசியல் கட்சிகளைச் சாா்ந்த மற்ற நபா்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
