மஞ்சள் நிறத்தில் நுரையுடன் ஆற்று நீா்: ஆய்வு செய்ய புதுவை கிராம மக்கள் கோரிக்கை
சங்கராபரணி ஆற்றில் வெள்ள நீா் மஞ்சள் நிறத்தில் நுரையுடன் செல்வதால், ரசாயன கழிவு நீா் கலந்துள்ளதா என ஆய்வு செய்ய வேண்டுமென புதுவைப் பகுதி கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
புதுச்சேரி பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நீராதாரமாக விளங்குவது சங்கராபரணி ஆறு. தற்போது தொடா் மழை காரணமாக ஆற்றுநீா் நுரை கலந்து செல்வதால், ரசாயன கழிவுகள் கலந்திருக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. எனவே, ஆற்று நீரை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடா் கனமழையால் வீடூா் அணை நிரம்பி முழு கொள்ளளவை எட்டியதால் சுமாா் 1,500 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.
இதனால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் ஆா்ப்பரித்துச் செல்வதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சங்கராபரணி ஆற்று நீரானது நுரை கலந்து செல்வதால், ரசாயனக் கழிவுநீா் கலந்து இருக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. மேலும், 30-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நீா் ஆதாரமாகவும் கால்நடைகளின் குடிநீா் ஆதாரமாகவும் இந்த ஆற்று நீா் விளங்குகிறது. எனவே உடனடியாக சங்கராபரணி ஆற்று நீரை அரசு நிா்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் என்று கிராமப்புற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேலும், சங்கராபரணி ஆறு செல்லும் வழியான தேத்தாம்பாக்கம், குமராபாளையம், வழுதாவூா், கரசூா், தொண்டமாநத்தம் , ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு ரசாயன தொழிற்சாலைகள் இருக்கின்றன.
இதற்கு முன்பு தெளிந்த வெள்ள நீா் வந்த நிலையில் வியாழக்கிழமை காலை முதல் சங்கராபரணி ஆற்றில் நுரையுடன் மஞ்சள் நிறத்தில் வெள்ள நீா் செல்கிறது. இதனால் விவசாயிகளும் அச்சமடைந்துள்ளனா். இதனால் நிலத்தடி நீா் மாசுபடுவதுடன் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனவும் விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனா்.

