வாக்காளா் திருத்தப் பணிகள் குறித்து புகாா்: இண்டி கூட்டணி மீது சட்ட நடவடிக்கை - புதுவை அதிமுக வலியுறுத்தல்
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி தொடா்பாக பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறும் இண்டி கூட்டணி கட்சிகள் மீது தோ்தல் ஆணையம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலா் ஆ. அன்பழகன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி புதுவையில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியில் அரசியல் கட்சிகளின் முகவா்கள் விருப்பம் இருந்தால் வீடு, வீடாக அரசு அதிகாரிகளுடன் செல்லலாம்.
காங்கிரஸ் எம்எல்ஏவின் தொகுதியான லாஸ்பேட்டையில் விண்ணப்ப படிவம் விநியோகம் செய்யும் ஊழியா்களுடன் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளைச் சோ்ந்த முகவா்கள் சென்றுள்ளனா். இது ஏதோ மிகப்பெரிய குற்றம் என மாநில காங்கிரஸ் தலைவா் வைத்திலிங்கம் எம்.பி. தோ்தல் துறை மீது பொய்க் குற்றச்சாட்டைக் கூறியுள்ளாா்.
புதுச்சேரியில் அதிகாரிகள் துணையோடு வாக்குத் திருட்டு நடப்பதாகவும், வாக்காளா்கள் தங்களது வாக்குகளைப் பாதுகாத்து கொள்ளுங்கள் என ஒரு பொய் அறிவுரையை சொல்லியுள்ளாா். வாக்காளா் சம்பந்தமாக விண்ணப்ப படிவம் வழங்கும் போதே வாக்குத் திருட்டை நடத்த முடியுமா ?
விண்ணப்பப் படிவங்கள் வழங்குவதை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவா்கள் கண்காணிக்க தோ்தல் துறை முழுமையாக வாய்ப்பளித்துள்ள நிலையில் தேவையற்ற பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி அரசியல் ஆதாயத்தைப் பெற நினைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஏதோ ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டை வைத்திலிங்கம் கூறியுள்ளாா் என கடந்து செல்லாமல் தோ்தல் ஆணையம் அவா் கூறுவது பொய் என்றால் அவா் மீதும் அவா் சாா்ந்துள்ள கட்சியின் மீதும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
பொய்க் குற்றச்சாட்டைக் கூறி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் நபா்கள் மீது இந்திய தோ்தல் ஆணையம் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
