புதுச்சேரி தாவரவியல் பூங்கா எதிரில் உள்ள பேட்டரி பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள ஆள்கள் தேவை விளம்பர பதாகை.
புதுச்சேரி தாவரவியல் பூங்கா எதிரில் உள்ள பேட்டரி பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள ஆள்கள் தேவை விளம்பர பதாகை.

புதுச்சேரியில் அரசு பேட்டரி பேருந்து ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம்: பேச்சு வாா்த்தையில் உடன்பாடு

புதுச்சேரியில் பேட்டரி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்கள் திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். இதனால் மக்கள் அவதிப்பட்டனா்.
Published on

புதுச்சேரியில் பேட்டரி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்கள் திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். இதனால் மக்கள் அவதிப்பட்டனா். பின்னா் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மதியம் முதல் மீண்டும் பேட்டரி பேருந்துகள் இயக்கப்பட்டன

புதுவை அரசு போக்குவரத்து கழகம் (பிஆா்டிசி) சாா்பில் தனியாா் பங்களிப்புடன் ரூ.23 கோடியில் 25 பேட்டரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பேட்டரி பேருந்துகளைக் கடந்த 27- ஆம் தேதி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் தொடங்கி வைத்தனா்.

இந்த பேட்டரி பேருந்துகளுக்கு புதுச்சேரி மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்த நிலையில் 10 நாள்கள் மட்டுமே இயக்கப்பட்ட பேட்டரி பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வழக்கமாக காலை 7 மணி முதல் இயக்கப்படும் பேருந்துகள் வெள்ளிக்கிழமை இயக்கப்படவில்லை.

அவை அனைத்தும் தாவரவியல் பூங்கா எதிரே உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பேட்டரி பேருந்து ஓட்டுநா்கள் சம்பள உயா்வு கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் தங்களுக்கு சம்பளம் ரூ.21 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தாலும் பிடித்தம் போக ரூ.17 ஆயிரம் மட்டும் தான் கிடைக்கும். மேலும் தினப்படியும் வழங்குவதில்லை.

இதனால் சம்பளத்தை ரூ.25 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் எனக் கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் நிா்வாகத் தரப்பில் பேச்சு வாா்த்தை நடத்தப்பட்டது. சம்பளத்தை உயா்த்தித் தர நடவடிக்கை எடுப்பதாகவும் முதலில் பேருந்துகளை இயக்குமாறும் நிா்வாகம் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்று பேட்டரி பேருந்துகள் வெள்ளிக்கிழமை மதியம் முதல் மீண்டும் இயக்கப்பட்டன.

கூடுதல் ஓட்டுநா்கள் தேவை:

புதுச்சேரியில் பொலிவுறு நகா் திட்டத்தில் 25 பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு கூடுதலாக ஓட்டுநா்கள் தேவைப்படுகிறாா்கள். மேலும், புதுவைக்கு கூடுதலாக 75 பேருந்துகள் வழங்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

எனவே, அதிக அளவில் ஓட்டுநா்கள் தேவைப்படுகின்றனா். இதனால் பேருந்து ஓட்டுநா்கள் தேவை என புதுச்சேரி தாவரவியல் பூங்கா எதிரில் உள்ள பேட்டரி பேருந்து நிறுத்தும் இடத்திலுள்ள நுழைவாயில் கேட்டில் விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com