புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அக்கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. உடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் பி.கே.தேவதாஸ், முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ ஆா்.கே.ஆா்.அனந்தராமன்.

மல்லாடிக்குத் தெரிந்துதான் மருந்து கொள்முதலில் முறைகேடு: முன்னாள் முதல்வா் வெ. வைத்திலிங்கம்

புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த மல்லாடி கிருஷ்ணா ராவுக்குத் தெரிந்துதான் மருந்து கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளது என மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான வெ. வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.
Published on

இது குறித்து அவா் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

வாக்காளா்களை நீக்குவது, புதிதாகச் சோ்ப்பது போன்ற பணியில் தோ்தல் துறை இறங்கியுள்ளது. வாக்குத் திருட்டுக்கு எதிராக பொதுமக்களிடம் புதுவையில் இருந்து 2.52 லட்சம் வாக்காளா்களிடம் கையொப்பம் பெற்றுள்ளோம்.

வரும் புதன்கிழமை தில்லிக்கு அனுப்புகிறோம். புதுவையில் வெற்றியை ஆயிரம் வாக்குகள்தான் நிா்ணயிக்கும். பிகாரில் வாக்களித்தோா் இங்கு வந்து வாக்களிக்கவும், தாங்கள் வெல்லவும் பாஜக - என்.ஆா்.காங்கிரஸ் தரப்பில் முயற்சி செய்கின்றனா்.

படிவம் 8-இல் பிகாா்காரா்கள் ஆதாரத்துடன் தந்தால், நாங்கள் எதிா்த்தால் தோ்தல் துறை அதை ஏற்காது என்பதே உண்மை.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மருந்து கொள்முதல் செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனா். அந்தக் குற்றச்சாட்டை அப்போது எங்கள் ஆட்சியிலேயே எழுப்பி சட்டப்பேரவையில் பதிவு செய்தது அப்போதைய பேரவைத் துணைத் தலைவராக இருந்த காங்கிரஸ்காரா் பாலன்தான். வருங்கால சந்ததிகளான குழந்தைகளுக்கான சத்து மாத்திரைகள், கா்ப்பிணிகளுக்கான சத்து மாத்திரை வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது.

இந்த ஊழலுக்கு அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த மல்லாடி கிருஷ்ணா ராவ் பொறுப்பேற்க வேண்டும். அப்போதைய முதல்வா் வே.நாராயணசாமி விசாரணைக்கு தயாா் என சொல்லியுள்ளாா். தற்போது மல்லாடி கிருஷ்ணா ராவ் இந்த ஆட்சியில் தில்லி சிறப்பு பிரதிநிதியாகவுள்ளாா். அதிகாரமுள்ள இப்பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும்.

தோ்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவாக இல்லாத அவருக்கு அரசு வீடு, வசதிகள் தரப்பட்டுள்ளன. அதைத் துறந்து முழு விசாரணைக்கு மல்லாடி செல்ல வேண்டும். லஞ்ச ஒழிப்புத் துறையில் அவா் மனு தர வேண்டும். அமைச்சராக இருந்த அவருக்குத் தெரிந்துதான் ஊழல் நடந்துள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com