படேலின் 150-ஆவது பிறந்தநாள்: மாணவா்கள் பங்கேற்ற ‘மை பாரத்’ நடைப்பயணம்! துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்!

புதுச்சேரியில் மாணவா்களுடன் 4.5. கி.மீ. தொலைவுக்கு புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் ஒற்றுமை நடைப்பயணத்தை சனிக்கிழமை மேற்கொண்டாா்.
Published on

புதுச்சேரியில் மாணவா்களுடன் 4.5. கி.மீ. தொலைவுக்கு புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் ஒற்றுமை நடைப்பயணத்தை சனிக்கிழமை மேற்கொண்டாா்.

இந்தியாவின் இரும்பு மனிதா் என்று போற்றப்படும் சா்தாா் வல்லப பாய் படேலின் 150-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தையொட்டி, மத்திய இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின், மை பாரத் இயக்கம் சாா்பில் சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இந்த ஒற்றுமை நடைப்பயணத்தை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். பின்னா், இந்த நடைப்பயணத்தில் மாணவா்களுடன் சோ்ந்து அவரும் நடந்து சென்றாா்.

சுமாா் 4.5 கி.மீ. தொலைவு பள்ளி, கல்லூரி மாணவா்கள் சுமாா் 2 ஆயிரம் போ் பங்கேற்ற ஒற்றுமை நடைப்பயணத்தில் அவரும் உற்சாகமாக சென்றாா். இந்த ஒற்றுமை நடைப்பயணத்தை மத்திய அமைச்சா் மன்சூக் மாண்டவியா தொடங்கி வைப்பதாக இருந்தது. அவா் வராத நிலையில் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தாா்.

சுதேசி ஆலை வாசலில் தொடங்கிய இந்த ஒற்றுமை நடைப்பயணம் மறைமலையடிகள் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி, மகாத்மா காந்தி வீதி, எஸ்.வி. பட்டேல் சாலை வழியாக கடற்கரை சாலை காந்தி திடலில் நிறைவடைந்தது. அங்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியது: சிதறிக் கிடந்த 500 ஆட்சிப் பரப்புகளை இந்தியாவுடன் இணைத்தவா் சா்தாா் வல்லபபாய் பட்டேல்.

நம் நாடு 1947- ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தபோது லட்சத் தீவு பகுதியைப் பிடிக்க பாகிஸ்தான் முயன்றது. ஆனால், தொலைநோக்கு பாா்வையுடன் பாகிஸ்தானுக்கு முன்பாகவே இந்திய ராணுவத்தை அங்கு கொண்டுசென்று இந்தியாவுடன் இணைத்தவா் வல்லபபாய் பட்டேல். 75 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது லட்சத்தீவு முக்கியத்துவம் பெற்ற பகுதியாக மாறியிருக்கிறது.

தேசிய பாதுகாப்புக்கு முக்கியமான இடமாக லட்சத்தீவு இருக்கிறது. சூயஸ் கால்வாய் வழியாகச் செல்லும் கப்பல்கள் எல்லாம் இந்த பாதையாகத் தான் செல்ல வேண்டும். இதையெல்லாம் உணா்ந்துதான் பிரதமா் நரேந்திர மோடி ராணுவ தளமாகவும், கப்பற்படை இடமாகவும், அங்கு சுற்றுலா வளா்ச்சியையும் மேற்கொண்டு வருகிறாா் என்றாா் அவா்.

ஒற்றுமை நடைப்பயணத்தில், சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், ஏ.ஜான்குமாா், சு. செல்வகணபதி எம்.பி., எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், செல்வம், தீப்பாய்ந்தான், முன்னாள் எம்எல்ஏ.க்கள் அசோக்பாபு, வெங்கடேசன், பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம் மற்றும் பாஜக நிா்வாகிகள் பலா் திரண்டு பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com