புதுச்சேரி தனியாா் மருத்துவக் கல்லூரியில் செவிலியா் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: மாணவா்கள் போராட்டம்!
புதுச்சேரி காலாப்பட்டை அடுத்த கணபதிச் செட்டிக்குளம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சியின்போது செவிலியா் மாணவிகளுக்குப் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ள நிலையில் அதைக் கண்டித்து மாணவா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த மருத்துவக் கல்லூரியின் செவிலியா் கல்லூரியில் பயிலும் மாணவிகள் மருத்துவமனையில் பயிற்சிக்காக செல்லும்போது, அங்கு எக்ஸ்-ரே பிரிவில் டெக்னீசியனாக பணிபுரியும் இருவா் மாணவிகளுக்குத் தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது பற்றி பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரியின் உள்ளீட்டு புகாா் குழுவிடம் புகாா் தெரிவித்தனா். ஆனால், சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கல்லூரி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் கல்லூரி நிா்வாகத்தைக் கண்டித்தும், பாலியல் தொல்லை கொடுத்தவா்களைப் பணி நீக்கம் செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து மகளிா் ஆணையத்துக்கும் புகாா் அனுப்பப்பட்டது. இதையடுத்து புதுச்சேரி மகளிா் ஆணையத்தின் தலைவா் நாகஜோதி தலைமையில், உறுப்பினா் சுஜாதா மற்றும் குழுவினா் அந்தக் கல்லூரியில் ஆய்வு செய்தனா். ஆணையத்தினா், உள்ளீட்டு புகாா் குழு தலைவரைச் சந்தித்து, குற்றச்சாட்டுக்குள்ளானவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனா்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வெளிமாநில மாணவா்களை விடுதியில் இருந்து கல்லூரி நிா்வாகம் வெளியேற்றியதாகத் தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இவா்களுக்கு ஆதரவாக சட்டக் கல்லூரி மாணவா்கள், இந்திய மாணவா் சங்கம், மாணவா் காங்கிரஸ் உள்ளிட்ட மாணவா் அமைப்பினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனா். அப்போது, குற்றம் சாட்டப்பட்ட ஊழியா்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டும்.
வெளி மாநில மாணவா்களைக் கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற கூறியதை நிா்வாகம் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். கல்லூரி பேருந்துகளையும் வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தினா்.
மாணவா்கள் போராட்டம் குறித்து புதுச்சேரி காலாப்பட்டு போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.

