100 நாள் வேலைதிட்டத் தொழிலாளா்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை: புதுவை மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
புதுச்சேரி: புதுச்சேரியில் 100 நாள் தேசிய வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து அக் கட்சியின் புதுவை மாநிலச் செயலா் எஸ்.ராமச்சந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காத புதுவை மாநிலம், மத்திய அரசுகளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது!
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 108 கிராமப் பஞ்சாயத்துகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்து வரும் 60,000-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளா்களுக்குக் கடந்த நான்கு மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படாமலிருக்கிறது.
இத் திட்டத்தில் வேலை செய்த 15 நாள்களுக்குள் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த அடிப்படைச் சட்டத்தை மத்தியிலுள்ள பாஜக அரசு மதிப்பது கிடையாது. அதேபோல, புதுவையில் ஆட்சி செய்துகொண்டிருக்கும் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசும், இந்தத் தொழிலாளா்களின் துயரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மெத்தனப் போக்குடன் செயல்படுகிறது.
2025-2026ஆம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், மத்திய அரசு 7 லட்சம் மனித வேலை நாள்களுக்கான நிதியை ஏற்கெனவே விடுவித்துள்ளது. இது சுமாா் ரூ. 21 கோடி. மேலும், கூடுதல் 5 லட்சம் மனித வேலை நாள்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தற்போது சுமாா் ரூ. 15 கோடிக்கும் அதிகமான சம்பளம் தொழிலாளா்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
இதற்குக் காரணம், புதுவை அரசு, மத்திய அரசுக்குச் சமா்ப்பிக்க வேண்டிய பயன்பாட்டுச் சான்றிதழை முறையாகச் சமா்ப்பிக்காததுதான் என்று தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை தற்போது முதல்வா் ரங்கசாமி வசம் உள்ளது. முதல்வரே இத்துறையின் அமைச்சராக இருந்தும், இதில் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. மேலும், கிராமப்புற வளா்ச்சித் துறை அதிகாரிகளும் இந்த நிலுவைத் தொகையை விரைந்து விடுவிப்பதற்கான எந்தவொரு ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.
எனவே, புதுவை முதல்வா் உடனடியாகத் தலையிட்டு, இனியும் காலம் கடத்தாமல் விவசாயத் தொழிலாளா்களுக்கு வேலை செய்த நாள்களுக்குரிய நிலுவைச் சம்பளமான ரூ. 15 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்.
அனைத்து பஞ்சாயத்துகளிலும் சட்டம் உறுதி செய்துள்ளபடி, 100 நாள்கள் முழுமையாக வேலையை உறுதி செய்ய வேண்டும். சட்டக்கூலியான ரூ. 336 (தினசரி ஊதியம்) குறைக்காமல் முழுமையாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமச்சந்திரன்.
