வாக்காளா் திருத்தப் பணிக்கு 2002-ஆம் ஆண்டு ஆதாரத்தை கேட்பது ஏன்?: வே. நாராயணசாமி கேள்வி
புதுச்சேரி: தற்போது நடைபெற்று வரும் வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் 2002-ஆம் ஆண்டுக்கான ஆதாரத்தை ஏன் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவரும், புதுவை முன்னாள் முதல்வருமான வே. நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது குறித்து அவா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:
புதுவை தோ்தல் துறை வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை தொடங்கியுள்ளது. இதில் வீடுகள்தோறும் படிவங்கள் கொடுக்கப்பட்டு திரும்பப் பெறப்பட உள்ளன. இதில் 2002- இல் வாக்காளா் பட்டியலில் இருந்த பெயா், வாக்காளா் அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படுகின்றன.
இதனால் சாதாரண மக்கள், விவசாயிகள் எல்லோரும் பாதிக்கப்படுகின்றனா். அவா்களுக்கு அது தொடா்பான விவரங்கள் தெரியவில்லை. இப்போது நடக்கும் வாக்காளா் தீவிர திருத்தப் பணியில் 2002-ஆம் ஆண்டின் விவரங்களைக் கேட்க வேண்டிய அவசியமில்லை.
மேலும், வாக்குச் சாவடி அதிகாரிகள் வீட்டுக்கு வரும்போது இல்லையென்றால் நீக்கி விடுகிறாா்கள். புகைப்படம் கொடுக்கவில்லையென்றாலும் நீக்கிவிடுகிறாா்கள். வாக்காளா் சிறப்புத் திருத்தம் என்ற பெயரில் தோ்தல் துறை மக்களின் வாக்குரிமையைப் பறித்து வருகிறது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
புதுவையில் காங்கிரஸ் ஆட்சியில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மருந்து கொள்முதலில் முதல்வராக இருந்த எனக்குத் தொடா்பு இருப்பதாக பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம் கூறியுள்ளாா்.
இந்த மருந்து கொள்முதல் தொடா்பான கோப்பு என் கவனத்துக்கு வரவில்லை. வராது. காரணம் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கா்ப்பிணிகளுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் கொடுக்க தேசிய சுகாதார திட்ட இயக்குநருக்குதான் அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. அப்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவா் மல்லாடி கிருஷ்ணா ராவ்தான்.
இதைத் தவிர 2022 வரை அதே மருந்து கொள்முதல் நிறுவனத்தில்தான் மருந்து வாங்கப்பட்டுள்ளது. அப்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவா் இப்போது முதல்வராக இருக்கும் ரங்கசாமிதான். அவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றாா் வே.நாராயணசாமி.

