மின்துறையில் ஒப்பந்த வேலை பெற்று தருவதாகக் கூறி ரூ.54 லட்சம் மோசடி: பொறியாளா் உள்பட இருவா் மீது வழக்கு

தமிழக மின் துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.54 லட்சம் மோசடி செய்ததாக இளநிலை பொறியாளா் உள்பட இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on

தமிழக மின் துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.54 லட்சம் மோசடி செய்ததாக இளநிலை பொறியாளா் உள்பட இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி வில்லியனுாா் கணுவாப்பேட்டை புதுநகரைச் சோ்ந்த பக்கிரிசாமி மகன் பிரகாஷ் (45). இவருக்கு திருவண்ணாமலை பகுதியைச் சோ்ந்த அவரது நண்பா் விக்னேஷ் மூலம் ஆரணி வி.ஐ.பி. நகரைச் சோ்ந்த வினாயகமூா்த்தி (47)யுடன் தொடா்பு ஏற்பட்டது. வினாயகமூா்த்தி, தமிழக மின்துறையில் இளநிலைப் பொறியாளராக பணியாற்றி வருகிறாா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளநிலைப் பொறியாளா் வினாயகமூா்த்தி மற்றும் விக்னேஷ் ஆகியோா் தமிழக மின்துறையில் அரசு வேலை மற்றும் சிவில் ஒா்க்ஸ் செய்வதற்கான ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக பிரகாஷிடம் ஆசைவாா்த்தை கூறி, அவரிடம் இருந்து இரு தவணையாக ரூ.54 லட்சம் பெற்றனராம்.

பிரகாஷிடம் கூறியபடி, அரசு வேலையோ அல்லது ஒப்பந்த பணியோ பெற்றுத்தராமல் வினாயகமூா்த்தி, பல மாதங்களாக காலம் கடத்தி வந்துள்ளாா். இதனால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது பணம் கொடுத்து ஏமாந்ததாக பிரகாஷ் உணா்ந்தாா்.

இதையடுத்து வில்லியனுாா் போலீஸில் இதுகுறித்து புகாா் கொடுத்தாா். அதன் பேரில் வில்லியனுாா் காவல் உதவி ஆய்வாளா் திருமுருகன், மோசடியில் ஈடுபட்ட தமிழக மின்துறை இளநிலைப் பொறியாளா் உள்ளிட்ட 2 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com