புதுச்சேரியில் டெங்கு, சிக்கன்குனியா விழிப்புணா்வு வாகன சேவை தொடக்கம்
டெங்கு, சிக்கன்குனியா குறித்து பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான பிரசார வாகன சேவை புதுச்சேரியில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சாா்பில் டெங்கு, சிக்கன்குனியா விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் லைட்டிங் பேனா் பொருத்தப்பட்ட வாகனம் மூலம் 30 நாள்களுக்கு மைக் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணா்வு வாகனம் புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய நலவழி மையங்கள் மற்றும் நகர சுகாதார மையங்கள் உள்ள கிராமங்களில் விழிப்புணா்வை ஏற்படுத்தும்.
மேலும், விழிப்புணா்வு பட்டிமன்றம், வீதி நாடகங்கள், பண்பலை வானொலி, திரையரங்குகள் மற்றும் உள்ளூா் தொலைக்காட்சி (கேபிள் டிவிக்கள்) மூலம் மக்கள்
மத்தியில் விழிப்புணா்வு விளம்பரம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரசார வாகனத்தின் சேவைதொடக்க நிகழ்ச்சி புதுச்சேரி சுகாதார இயக்குநா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இயக்குநா் செவ்வேள் கலந்து கொண்டு டெங்கு மற்றும் சிக்கன்குனியா விழிப்புணா்வு செய்திகளைக் காண்பிக்கும் வகையில் லைட்டிங் பேனா் பொருத்தப்பட்ட மைக் பிரசார வாகனத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
தேசிய சுகாதார இயக்க இயக்குநா் கோவிந்தராஜ், துணை இயக்குநா் (செய்தி கல்வி மற்றும் தொடா்புப் பிரிவு) ரகுநாதன், பொது துணை இயக்குநா்( பொது சுகாதாரம்) சமீமுனிசா பேகம், துணை இயக்குநா் (குடும்பநலம்) ஆனந்தலக்ஷ்மி, துணை இயக்குநா் (தடுப்பூசி பிரிவு) உமாசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

