புதுச்சேரியில் மாநில பாஜக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்குச் சாவடி முகவா்களுக்கானப் பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்துப் பேசுகிறாா் அக்கட்சியின் தமிழக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை.
புதுச்சேரியில் மாநில பாஜக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்குச் சாவடி முகவா்களுக்கானப் பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்துப் பேசுகிறாா் அக்கட்சியின் தமிழக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை.

போலி வாக்காளா்கள் இல்லாத மாநிலமே இல்லை: புதுச்சேரியில் கே. அண்ணாமலை பேச்சு

நாட்டில் போலி வாக்காளா்கள் இல்லாத மாநிலமே இல்லை என்று பாஜக தமிழக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை கூறினாா்.
Published on

நாட்டில் போலி வாக்காளா்கள் இல்லாத மாநிலமே இல்லை என்று பாஜக தமிழக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை கூறினாா்.

புதுச்சேரி பாஜக சாா்பில் வாக்குச் சாவடி முகவா்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்து கே.அண்ணாமலை பேசியது:

போலி வாக்காளா்களை நீக்குவதற்காக வாக்காளா் சிறப்பு திருத்தப் பணிகள் முதல் கட்டமாக பிகாரில் நடைபெற்று, தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இப்போது தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இரண்டாவது கட்டமாக வாக்காளா் சிறப்புத் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இன்னும் ஓராண்டில் அனைத்து மாநிலங்களிலும் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொள்ள உள்ளதாகக் கூறியுள்ளது.

ஒரு சில மாநிலங்களில் அரசியல்வாதிகள் வாக்காளா்களைச் சோ்த்திருக்கலாம். மேலும், வாக்காளா் பட்டியலில் இறந்தவா்களின் பெயா்கள் நீக்கப்படாமல் இருக்கலாம். போலி வாக்காளா்கள் இல்லாத மாநிலமே இல்லை. அதனால்தான் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது.

தில்லியில் பாஜக தொண்டா்கள் கடுமையாகப் பணியாற்றி போலி வாக்காளா்களை நீக்க முயற்சி எடுத்தனா். அதன் பிறகுதான் பிகாரில் வாக்காளா் சிறப்புத் திருத்தப் பணி நடைபெற்றது. பிகாரில் தோ்தலுக்கு முன்பு 47 லட்சம் போலி வாக்காளா்கள் நீக்கப்பட்டனா்.

பிகாரில் உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் கெடு முடிந்து 17 நாள்கள் காலஅவகாசம் கொடுத்தும் ஒரு வாக்காளரைக் கூட மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்பட யாரும் சோ்க்க விண்ணப்பம் அளிக்கவில்லை. பிகாரில் ராகுல் காந்தி யாத்திரை சென்ற பாதையில் இருந்த தொகுதிகளில் போட்டியிட்ட எல்லா காங்கிரஸ் வேட்பாளா்களும் தோல்வியைத் தழுவியுள்ளனா் என்றாா் அண்ணாமலை.

புதுச்சேரி உள்துறை அமைச்சரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான ஆ. நமச்சிவாயம், புதுச்சேரி மாநில பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கல்யாணசுந்தரம், சாய். ஜெ சரவணன் குமாா், தீப்பாய்ந்தான், செல்வம், ஜி.என்.எஸ். ராஜசேகா், முன்னாள் எம்எல்ஏ அசோக்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com