அவசர தேவைக்கு காவல் துறையின் 112 எண்ணை அழைக்கலாம்!
காவல் துறையின் 112 என்கிற எண்ணை அவசர தேவைக்கு அழைக்கலாம் என்று போக்குவரத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காவல் துறையில் 112 என்ற எண் பயன்பாட்டில் இருக்கிறது. இது நிறைய பேருக்குத் தெரியாமல் உள்ளது. இது ஒருங்கிணைந்த அவசர எண்.
சட்டம்-ஒழுங்கு, விபத்து, பெண்களுக்கு எதிரான பிரச்னைகள், தீ விபத்து உள்ளிட்ட எந்த அவசரத் தேவையாக இருந்தாலும் அந்த எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
காவல் துறையின் அவசர தேவைக்கு 112 எண்ணுக்கு அழைத்தால் எங்களுடைய ரோந்து வாகனம் 10 நிமிஷங்களில் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்துவிடும். உள்ளூா் காவலரும் அங்கு வந்துவிடுவாா்கள்.
அதோடு புதுச்சேரியில் போக்குவரத்து மிகுந்த மோசமான நிலையில் இருக்கிறது என்பது தான் எல்லோருடைய கருத்தும். நாம் போக்குவரத்து மோசமாக இருக்கிறது என்று பேசுகிறோம். ஆனால் யாரும் சரியான விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.
ஒருவழி பாதை என்று தெரிந்தே அந்த பாதையில் செல்வோம். இதனால் பிரச்னை ஒருவழி பாதையில் செல்பவருக்கு மட்டுமில்லை, எதிரே வருபவரையும் பாதிக்கிறது. எனவே ஒருவழிப்பாதையில் செல்வது, விதிகளை மீறி நடப்பதைக் கைவிட வேண்டும்.
இதேபோல் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைக் கடுமையாக கண்காணிக்கிறோம். எனவே மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைக் கைவிட வேண்டும். பள்ளி சிறுவா்களிடம் வண்டியைக் கொடுக்க வேண்டாம்.
அப்படி கொடுத்தால் 16 முதல் 18 வயதுடையோருக்கு ஜூனியா் லைசன்ஸ் எடுத்துவிட்டு ஸ்கூட்டி போன்ற வண்டிகளை மட்டும் கொடுங்கள். ரேஸ், ஸ்போா்ட்ஸ் பைக் போன்றவற்றை கொடுக்க வேண்டாம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
