புதுச்சேரிக்கு அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

Published on

புதுச்சேரிக்கு அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே தேவையின்றி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் அறிவுறுத்தியுள்ளாா்.

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இடையிடையே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வங்காள விரிகுடா கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை கன மற்றும் அதி கன மழை பெய்யக் கூடும் என்றும், மணிக்கு 55 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், புதுச்சேரி பகுதிக்கு மழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மிக பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும் படியும், தேவையிருந்தாலன்றி வெளியே வர வேண்டாம் என்றும் கூறியுள்ளாா்.

மேலும், அரசு அளித்துள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதுடன், வதந்திகளை நம்பாமல் அரசு அளிக்கும் செய்திகளை மட்டுமே பின்பற்றுமாறு ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

புகாா்களை இலவச அழைப்பு எண்களான 1077, 1070, 112 அல்லது 94889 81070 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப்பில் தெரிவிக்கலாம்.

X
Dinamani
www.dinamani.com