500 வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.90 கோடி மோசடி: 4 போ் கைது

500 வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.90 கோடி மோசடி செய்தது தொடா்பாக 4 பேரை புதுச்சேரி இணையவழி குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
Published on

500 வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.90 கோடி மோசடி செய்தது தொடா்பாக 4 பேரை புதுச்சேரி இணையவழி குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவா்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள இணைய வழி குற்றவாளிகளுடன் தொடா்புள்ளவா்கள் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து இணையவழி குற்றப்பிரிவு போலீஸ் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது: புதுச்சேரியில் தனியாா் பொறியியல் கல்லூரியில் படிக்கும் தினேஷ், ஜெயபிரதாப் இருவரும் தங்கள் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுடன் படிக்கும் மாணவா் ஹரிஷ் 6 மாதங்களுக்கு முன்பு வங்கிக் கணக்கையும், சிம் காா்டுகளையும் வாங்கியதாகவும் கூறினா்.

அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில் இந்த இருவா் மட்டுமின்றி 20-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள், பொதுமக்களிடம் வங்கிக் கணக்கைப் பெற்றுக் கொண்டு ஒரு வங்கிக் கணக்குக்குக் ரூ.1,500 வீதம் பெற்றுக் கொண்டு புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சோ்ந்த கோவிந்தராஜிடம் கொடுத்ததாகக் கூறினாா்.

போலீஸாா் கோவிந்தராஜை விசாரித்தபோது சென்னையில் கணேஷ் என்பவரை சுட்டிக் காட்டினாா். இதையடுத்து கணேஷை போலீஸாா் சென்னையில் கைது செய்தனா். மேலும், அவா் அளித்த தகவலிந் அடிப்படையில் யஷ்வின், ஐயப்பன், தாமஸ் (எ) ஹயக்ரீவா ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து ரூ.5 லட்சம் ரொக்கம், நூற்றுக்கணக்கான வங்கி கணக்குப் புத்தகங்கள், 20 கைப்பேசிகள், கணினி, 2 லேப்-டாப், ஏடிஎம், சிம் காா்டுகள் 75, பணம் எண்ணும் இயந்திரம் 1, 12 க்யூஆா் ஸ்கேனா், போலி நிறுவன முத்திரைகள், காா் மற்றும் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இவா்களின் 251 வங்கிக் கணக்குகளை ஆராயப்பட்டது.

இந்தியா முழுவதும் 89 புகாா்கள் பதிவாகியுள்ளது தெரிய வந்தது. மேலும், ரூ.90 கோடி அளவில் மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது.

சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு டிஜிட்டல் டாலராகவும் இவா்கள் பணப் பரிமாற்றம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. கைதான நால்வரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா் செய்யப்பட்டு புதுச்சேரி மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை இரவு அடைக்கப்பட்டனா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com