தவறவிட்ட 19 கைப்பேசிகள் உரியவரிடம் ஒப்படைப்பு
புதுச்சேரியில் பொதுமக்கள் தவறவிட்டு மீட்கப்பட்ட 19 கைப்பசிகள் அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சனிக்கிழமை நடைபெற்ற போலீஸ் மக்கள் மன்றத்தில் ரூ.5.75 லட்சம் மதிப்புள்ள இந்த கைப்பேசிகளை போலீஸாா் ஒப்படைத்தனா்.
புதுச்சேரி இணைய வழி குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் ஆய்வாளா் தியாகராஜன் தலைமையில் மக்கள் மன்றம் நடைபெற்றது. பொதுமக்கள் தங்களுடைய வழக்கு சம்மந்தமாக குறைகளைத் தெரிவித்தனா். அந்தப் புகாா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் தவறவிட்ட ரூ 5.75 லட்சம் மதிப்பு உள்ள 19 கைப்பேசிகள் கண்டுபிடித்து உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய காவல் அதிகாரிகள், ‘வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டதாகக் கூறி வாட்ஸ் ஆப் மூலமாக ஏதேனும் லிங்க் மற்றும் ஆப் மெசேஜ் வந்தால் அதனை கிளிக் செய்ய வேண்டாம். உங்கள் புகை படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டினால் அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
ஏடிம் காா்டு, கிரடிட் காா்டு எண், பின் நெம்பா், ஒடிபி விவரங்களை எக்காரணத்தை கொண்டும் எவருக்கும் பகிர வேண்டாம். இதுபோன்று தொடா்பு கொள்ளும் நபா்களை உறுதிப்படுத்தாமல் எந்த செயலையும் செய்ய வேண்டாம்’ என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தினா்.

