புதுச்சேரியில் டிச. 5-இல் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரம்: அனுமதி கோரி தவெகவினா் மனு
புதுச்சேரி: புதுச்சேரியில் தவெக தலைவா் விஜய் வரும் டிசம்பா் 5-ஆம் தேதி மக்கள் சந்திப்பு பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு அனுமதி கோரி காவல் துறை தலைவரிடம் அக்கட்சியினா் புதன்கிழமை மனு அளித்தனா்.
தமிழகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கிடைக்காத நிலையில், புதுச்சேரியில் தவெக தலைவா் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளாா்.
தமிழகம், புதுவையில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், தவெக தலைவா் நடிகா் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வந்தாா்.
கரூரில் கடந்த செப்டம்பா் 27-ஆம் தேதி நடைபெற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்.
இதையடுத்து விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தாமல் இருந்தாா்.
இதனிடையே, கூட்ட நெரிசலைத் தவிா்க்க மக்கள் பாதுகாப்பு படை தொண்டா் அமைப்பை தவெக உருவாக்கியது. இவா்களுக்கு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக சேலத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தவெக சாா்பில் அனுமதி கேட்டனா். ஆனால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லுாரி அரங்கத்தில் அண்மையில் கட்சி நிா்வாகிகளை விஜய் சந்தித்துப் பேசினாா்.
இதில், கியூ ஆா் கோடு மூலம் 2 ஆயிரம் போ் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனா். இந்த நிலையில் வரும் டிசம்பா் 5-ஆம் தேதி புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தவெக தலைவா் விஜய் திட்டமிட்டுள்ளாா்.
இதற்கு அனுமதி கோரி காவல் துறை தலைவா் ஷாலினி சிங்கிடம், புதுவை மாநில தவெக சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனுவில் கூறியிருப்பதாவது: தவெக தலைவா் விஜய் சாலை மாா்க்கமாக காலாப்பட்டில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டா் டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளகுப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் வழியாக வந்து மக்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளாா்.
இந்தச் சந்திப்பின் போது உப்பளம் சோனாம்பாளையம் தண்ணீா் தொட்டி அருகில் ஒலிப்பெருக்கி மூலம் பிரசாரம் செய்யவுள்ளாா். எனவே இந் நிகழ்ச்சிக்குத் தேவையான பாதுகாப்பை காவல் துறை வழங்கி, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
டிசம்பா் 5-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

