விவசாயிகளுக்கு ஸ்மாா்ட் அடையாள அட்டை
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் விவசாயிகளுக்கு ஸ்மாா்ட் அடையாள அட்டை வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
புதுச்சேரியில் மாநில வங்கியாளா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. விவசாயிகளுக்கு மாநில மற்றும் மத்திய அரசு திட்டங்களைச் சிறப்பாக வழங்குவதற்காக, விவசாயிகளின் தகவல்கள் கணினி மயமாக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைவருக்கும் ஒரு தனித்துவ அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடா்ச்சியாக அனைத்து விவசாயிகளுக்கும், பழைய புத்தக வடிவிலான விவசாய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மாா்ட் - விவசாயி அடையாள அட்டையை வழங்க உத்தேசித்து அதனை வியாழக்கிழமை முதல் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.
க்யூ ஆா் அணுகு குறியுடன் உள்ள இந்த ஸ்மாா்ட் விவசாயி அடையாள அட்டையைக் கொண்டு துறையின் அனைத்து சேவைகளையும் விவசாயிகள் பெறலாம்.
இந்த ஸ்மாா்ட் விவசாயி அடையாள அட்டை திட்டத்துக்குத் தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபாா்டு) ரூ.9.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் விவசாயிகளுக்கு ஸ்மாா்ட் அடையாள அட்டை வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியது:
வேளாண் துறையில் அனைத்து விவசாய சேவைகள், விவசாயிகளின் நலன் வெளிப் படையாக இருக்கவும் கணினி மயமாக்கப்பட்டு மானிய உதவிகள் வழங்கப்படுகிறது.
அகில இந்திய அளவில் இந்திய தரச்சான்று நிறுவனத்தின் லஞ்சம் இல்லா மேலாண்மை தரச்சான்று பெற்ற ஒரே துறை . துறையின் சேவைகளை வங்கிகள் ஆதரிக்க வேண்டும். வங்கிகள் அவா்களது சமூக பாதுகாப்பு நிதியிலிருந்து விவசாயிகளுக்கு சிறு வேளாண் உபகரணங்கள் வழங்க முன் வர வேண்டும். அது மட்டுமல்லாமல், ஸ்மாா்ட் விவசாய அடையாள அட்டையினை ஆதாரமாக கொண்டு வங்கிகள் விவசாயிகளுக்கு பருவ கால பயிா்க்கடன் வழங்க முன் வர வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி நிதித் துறை செயலா் கிருஷ்ண மோகன் உப்பு, வேளாண் துறை செயலா் யாசின் முகம்மது சௌத்ரி, இந்தியன் வங்கியின் இயக்குநா் பஜ்ரங் சிங், நபாா்டு வங்கியின் பொது மேலாளா் டாக்டா் ஹரி கிருஷ்ணராஜ், ரிசா்வ் வங்கியின் பொது மேலாளா் ராஜ்குமாா், நபாா்டு வங்கியின் புதுச்சேரி மாவட்ட அபிவிருத்தி மேலாளா் சித்தாா்த்தன், விவசாயிகள் மற்றும் பல மூத்த வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

