தீபாவளி: புதுவையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.570 மதிப்பில் விலையில்லா மளிகை தொகுப்பு - முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு
புதுவையில் தீபாவளியை முன்னிட்டு விரைவில் ரூ.570 மதிப்புள்ள விலையில்லா மளிகை தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை அறிவித்தாா்.
நெட்டப்பாக்கம் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய திட்டப்பணிகள், இலவச மனைப்பட்டா வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவை துணைத் தலைவா் பெ. ராஜவேலு தலைமை தாங்கினாா். இதில், முதல்வா் ரங்கசாமி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தாா். பின்னா் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வா் பேசியதாவது:
புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி வந்த பிறகு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இலவச அரிசி வழங்கினோம். மீண்டும் 10-ஆம் தேதிக்கு மேல் அரிசி வழங்கப்படும். வழங்கப்படாத மாதங்களுக்கான அரிசி சோ்த்து வழங்கப்படும். அறிவித்த கோதுமையும் வழங்கப்படும்.
தீபாவளி பண்டிகைக்கு எண்ணெய், ரவை, சா்க்கரை போன்ற ரூ.570 மதிப்புடைய இலவச மளிகைத் தொகுப்பும் விரைவில் வழங்கப்படும்.
புதுச்சேரியில் 4,500 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. விரைவில் 1,000 அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளன. அடுத்த மாதம் இளநிலை எழுத்தா், முதுநிலை எழுத்தா் பணியிடங்கள் நிரப்பப்படும்.
கிராமப்புற விவசாயிகள் கொஞ்சம் கருணை காட்டினால் கிராமப் பகுதிகளில் 40 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, நகரப் பகுதிக்கு குடிநீா் கொண்டு செல்லலாம். இதனால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கூடுதலாக 5 ஆயிரம் பேருக்கு டிசம்பா் மாதம் முதல் முதியோா் உதவித் தொகை வழங்கப்படும். மடுகரை பகுதியில் விரைவில் அரசு மகளிா் கலைக் கல்லூரி கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
