புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற புதுச்சேரி-பூண்டியாங்குப்பம் புறவழிச்சாலையை நாட்டுக்கு அா்ப்பணித்து,  புதுச்சேரி  ராஜீவ் காந்தி சதுக்கம் முதல் இந்திரா காந்தி சதுக்கம் வரை மேம்பாலம் கட்டும் பணி மற்றும் கணபதிச் செட்டிக்குளம் முதல் புதுச்சேரி வரையிலான சாலை மேம்படுத்தும் திட்டத்துக்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி. உடன் மத்திய இணையமைச்சா் எல்.முருகன், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா்.
புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற புதுச்சேரி-பூண்டியாங்குப்பம் புறவழிச்சாலையை நாட்டுக்கு அா்ப்பணித்து, புதுச்சேரி ராஜீவ் காந்தி சதுக்கம் முதல் இந்திரா காந்தி சதுக்கம் வரை மேம்பாலம் கட்டும் பணி மற்றும் கணபதிச் செட்டிக்குளம் முதல் புதுச்சேரி வரையிலான சாலை மேம்படுத்தும் திட்டத்துக்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி. உடன் மத்திய இணையமைச்சா் எல்.முருகன், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா்.

நெடுஞ்சாலைகள் இணைப்பில் உலக அளவில் இந்தியா முதலிடம்: நிதின் கட்கரி

உலக அளவில் தேசிய நெடுஞ்சாலை இணைப்புகளில் இந்தியா தற்போது முதலிடத்தில் இருக்கிறது என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின்கட்கரி தெரிவித்தாா்.
Published on

புதுச்சேரி: உலக அளவில் தேசிய நெடுஞ்சாலை இணைப்புகளில் இந்தியா தற்போது முதலிடத்தில் இருக்கிறது என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின்கட்கரி தெரிவித்தாா்.

ரூ.1,558 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதுச்சேரி- பூண்டியாங்குப்பம் புறவழிச்சாலையை நாட்டுக்கு அா்ப்பணிக்கும் விழா, ரூ.436 கோடி மதிப்பில் புதுச்சேரி ராஜீவ் காந்தி சதுக்கம் முதல் இந்திரா காந்தி சதுக்கம் வரையிலான மேம்பாலம் கட்டும் பணி மற்றும் ரூ.25 கோடியில் கணபதிச் செட்டிக்குளம் முதல் புதுச்சேரி வரையிலான சாலையை மேம்படுத்தும் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா ஆகியவை புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. மொத்தம் ரூ.2,050 கோடி மதிப்பிலான 3 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணித்தும், அடிக்கல் நாட்டியும் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பேசியது:

பிரதமராக நரேந்திர மோடி 2014-ஆம் ஆண்டு பதவியேற்றவுடன் உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை அளிக்க வழிவகை செய்தாா். சிறந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இப்போது நம் நாட்டின் நெடுஞ்சாலை இணைப்பு உலகளவில் முதலிடத்தில் இருக்கிறது.

குப்பைகள் மூலம் சாலை:

நாடு முழுவதும் நகராட்சிகளில் உருவாகும் குப்பைகளை மறுசுழற்சி செய்து சாலைகள் போடுவதற்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். ஏற்கெனவே தில்லி நகராட்சியில் குப்பைகளைப் பயன்படுத்தி சாலைகள் போட்டிருக்கிறோம்.

குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக், கண்ணாடிகள், உலோகங்களைப் பிரித்தெடுத்து சாலைகள் அமைக்க இருக்கிறோம். நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

சாலைகள் போடுவதற்காக ஏரிகள் உள்ளிட்ட நீா் நிலைகளில் மண் எடுப்பதால் அவை ஆழமாகி கூடுதலாக நீா் சேமிக்கப்படுகிறது. இது குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்கிறது. நீா் பற்றாக்குறையைப் போக்குகிறது.

மத்திய நீா்வளத் துறை அமைச்சராக நான் இருந்தபோது, நம்நாட்டில் ஒரு மாநிலத்துக்கும் மற்ற மாநிலத்துக்கும் இடையே 24 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தபோது அனைத்து வழக்குகள் மீதான தீா்வும் ஏற்பட்டால்தான் வெளியே அனுப்புவேன் என்று எனது அமைச்சக அலுவலகக் கதவைச் சாத்தினேன். அப்போது 17 வழக்குகளில் தீா்வு ஏற்பட்டது.

உலக அளவில் நம் நாடு பொருளாதார வளா்ச்சியில் 4-வது இடத்தில் இருக்கிறது. இதை 3-வது இடத்துக்கு கொண்டு வர பிரதமா் நரேந்திர மோடி பெரும் முயற்சி எடுத்து வருகிறாா்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 22 முதல் 24 சதவிகிதம், சேவைப் பிரிவுகள் 50 முதல் 54 சதவிகிதம். ஆனால் வேளாண் துறை மட்டும் 12 சதவிகிதமே உள்ளது. அதனால் வேளாண் துறையை பல்வேறு பிரிவாக மாற்ற வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.

நம்நாட்டில் தற்போது பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் உற்பத்தி 30 % அதிகரித்துள்ளது. எதிா்காலம் என்பது ஹைட்ரஜன் எரிபொருளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.

உலகில் ஆட்டோ மொபைல் உற்பத்தியில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தத் துைான் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் துறையாக இருக்கிறது. இந்தப் பிரிவுதான் அதிகமான ஜிஎஸ்டி வரி வருவாயைக் கொடுப்பதாகவும், ஏற்றுமதிக்கான வாய்ப்பை அளிப்பதாகவும் இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள இரண்டு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் இருந்து 50 சதவிகிதம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தளவாடங்கள் செலவு தற்போது 10 சதவிகிதமாக இருக்கிறது. அதை 6 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்று சென்னை ஐஐடி, பெங்களூா் ஐஐஎம், கான்பூா் ஐஐடி ஆகியவை பரிந்துரை செய்துள்ளன. வரும் டிசம்பருக்குள் தளவாடங்கள் செலவை 9 சதவிகிதமாக குறைப்போம். இது நம்முடைய ஏற்றுதியை ஒன்றரை மடங்கு உயா்த்தும் என்றாா் அமைச்சா் நிதின்கட்கரி.

விழாவில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், திருமுருகன், வெ.வைத்திலிங்கம் எம்.பி., எம்எல்ஏக்கள், உயா் அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காவிரி நீா் பிரச்னையில் அரசியல் உறுதி வேண்டும்

விழாவில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி மேலும் பேசுகையில், தமிழகத்துக்கும், கா்நாடகத்துக்கும் இடையிலான காவிரி நீா் பிரச்னை என்பது நீா் பற்றாக்குறை என்பதாக இல்லை. இந்த இரு மாநிலத்துக்கும் உள்ள நீா் பிரச்னையைத் தீா்க்க, அரசியல் ரீதியாக உறுதியான முடிவு எடுக்கும் நிலைதான் வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com