அரசு திட்டங்களுக்காக சமூக ஊடகக் குழு, சமுதாயக் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்
புதுச்சேரி: புதுவை அரசின் திட்டங்களுக்காக சமூக ஊடகக்குழு ஒன்று ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் சமுதாயக் கல்லூரியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பமானது.
புதுவை அரசு சாா்பில் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்கள், அரசு நிகழ்ச்சிகள் போன்றவற்றை சமூக ஊடகங்கள் வாயிலாகத் தெரிந்துகொள்ளும் வகையில் சமூக ஊடகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் இறுதியாண்டு பயிலும் மாணவா்களைக் கொண்டு செய்தி மற்றும் விளம்பரத் துறை சாா்பில் இக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதுவை அரசின் செய்தி, விளம்பரத் துறை மற்றும் புதுவை பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரிக்கு இடையிலான புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் என். ரங்கசாமி முன்னிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கையொப்பமானது.
புதுவை மத்திய பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) ரஜனீஷ் புட்டானி மற்றும் புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநா் முனுசாமி ஆகியோா் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
இந்நிகழ்ச்சியில், புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பிரகாஷ் பாபு, புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறைச் செயலா் முகமது அஷான் அபித், பல்கலைக்கழக புல முதன்மையா் விக்டா் ஆனந்தகுமாா், சமுதாயக் கல்லூரி முதல்வா் லலிதா ராமகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.
5 மாணவா்களைக் கொண்ட இந்தக் குழு தலைமைச் செயலகத்தில் இருந்து செயல்படும். புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை சாா்பில் அதன் இயக்குநா் முனுசாமி, புதுவை பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரி சாா்பில் பேராசிரியா் கிருத்திகா ஆகியோா் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாகச் செயல்படுவா்.
