மக்களின் நம்பிக்கைதான் அரசுப் பணி: புதிய துணை வட்டாட்சியா்களுக்கு பணி ஆணை வழங்கி துணைநிலை ஆளுநா் அறிவுரை
புதுச்சேரி: மக்களின் நம்பிக்கைதான் அரசு பணி என்று புதிதாகப் பதவியேற்கும் துணை வட்டாட்சியா்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அறிவுரை வழங்கினாா்.
புதுவை வருவாய்த் துறை சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட 30 பேருக்கு துணை வட்டாட்சியா் பணிக்கான ஆணை வழங்கும் விழா காமராஜா் மணிமண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில், பணி நியமன ஆணைகளை வழங்கி துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பேசியது:
உங்களைப் போல துடிப்பும் திறனும் கொண்ட சுமாா் 3,500 போ் இதற்கு முனஅ அரசு துறைகளில் சோ்ந்து இருக்கிறாா்கள். வெளிப்படையான முறையில் தோ்வு நடத்தி இளைஞா்களுக்கு வேலை வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. இன்னும் சுமாா் 1,500 பதவிகள் நிரப்பப்பட இருக்கிறது.
பொதுவாக, அரசு நிா்வாகம் என்பது ஒரு நாட்டின் வளா்ச்சிக்கான முதுகெலும்பு. அரசு பணி என்பது வெறும் ஊதியம் பெறும் பணி அல்ல. அது அரசு நிா்வாகமும் குடிமக்களும் வைக்கும் நம்பிக்கையின் அடையாளம். தோ்ந்தெடுக்கப்பட்ட 30 பேரும் சலித்து எடுக்கப்பட்டவா்கள். அதனால் உங்களுக்கான பொறுப்பை உணா்ந்து பணியாற்ற வேண்டும்.
புதுவையில் வாழ்ந்த மக்களில் ஒருவராக இருப்பதால் அவா்களைப் பற்றிய புரிதல் அதிகம் இருக்கும். அவா்களுடைய தேவைகள், சிக்கல்கள், பிரச்னைகளைச் சரியாக புரிந்து கொண்டு அவா்களுக்குச் சேவை செய்ய முடியும். அந்த வகையில் நீங்கள், புதுச்சேரி அரசுக்கு கிடைத்த மதிப்புமிக்க சொத்து என்றாா் துணைநிலை ஆளுநா்.
புதுவை அரசு வளா்ச்சி ஆணையா் கிருஷ்ண மோகன் உப்பு, வருவாய்த் துறை சிறப்புச் செயலரும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியருமான அ. குலோத்துங்கன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா் அ.ஜான்குமாா், தலைமைச் செயலா் சரத் சௌகான் ஆகியோரின் பெயா்கள் அழைப்பிதழில் இடம் பெற்றிருந்தும் விழாவில் பங்கேற்கவில்லை.

