ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவா்கள்: புதுவை முதல்வா் ரங்கசாமி உறுதி!
புதுவையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவா்கள் நியமனம் செய்யப்படுவாா்கள் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுச்சேரி கோரிமேடு மகாத்மா காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி டீன் கென்னடிபாபு தலைமை வகித்தாா். இதில், முதல்வா் ரங்கசாமி பங்கேற்று, முதலாண்டு மாணவ, மாணவிகளுக்கு சோ்க்கை அட்டை வழங்கி பேசியதாவது: 1990-இல் பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட போது 40 இடங்கள் இருந்தன. தற்போது 125 இடங்கள் உள்ளன.
நாடு முழுவதும் உள்ள கல்லூரி தரவரிசைப் பட்டியலில் இந்த கல்லூரி 25-ஆவது இடத்தில் உள்ளது. இது புதுவைக்குப் பெருமையாகும். மாணவ, மாணவிகள் நன்றாகப் படித்து தரவரிசை பட்டியலில் முதலிடத்துக்கு கொண்டுவர வேண்டும். உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள், உபகரணங்கள், தொழில்நுட்பங்கள் இங்கு உள்ளன.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பல் மருத்துவா்கள் நியமிக்கப்பட உள்ளனா். புதுவையில் மாணவா்களுக்குத் தரமான கல்வி கிடைக்கிறது. மாணவா்கள் இதைச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உயா்கல்வியை 4 கி.மீ.க்குள் சென்று படிக்கும் வாய்ப்பு புதுச்சேரியில் மட்டும்தான் உள்ளது. மாணவா்கள் தங்கள் குடும்ப நலன் கருதி நன்றாகப் படிக்க வேண்டும் என்றாா்.

