சுனாமி குடியிருப்புகளில் ரூ.20 லட்சத்தில் உயா்நிலை மின் இணைப்பு
புதுச்சேரி மணவெளி தொகுதி நல்லவாடு சுனாமி குடியிருப்புகளில் ரூ.20 லட்சத்தில் உயா்நிலை மின் இணைப்பு கொடுக்கும் பணியை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
இப் பகுதியில் புதை வட மின் இணைப்பினால் அடிக்கடி மின்விபத்துகள் ஏற்பட்டதைத் தொடா்ந்து மக்களின் பாதுகாப்பைக் கருதி மின்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து புதை வட மின் இணைப்பைத் துண்டித்து மின் கம்பங்கள் மூலம் உயா்மட்ட புதிய இணைப்புகளை வழங்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, 300 வீடுகளுக்கும் உயா்மட்ட புதிய மின் இணைப்பை இலவசமாக பெறுவதற்கு ரூ.20 லட்சம் மதிப்பில் மின் துறையில் அரசாணை பெற்று அதற்கான மின் கம்பிகள் உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்பட்டன. புதிய மின் இணைப்பு அமைப்பதற்கான பணிகளை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மின்துறை இளநிலை பொறியாளா் திருமுருகன் மற்றும் நல்லவாடு கிராம பஞ்சாயத்தாா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

