பிரீபெய்டு ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை கைவிட புதுவை மாா்க்சிஸ்ட் கோரிக்கை!
பிரீபெய்டு ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று புதுவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு அளித்துள்ளது.
புதுவை மின் துறை கண்காணிப்புப் பொறியாளா் கனியமுதனை, மாா்க்சிஸ்ட் மாநில செயலாளா் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நிா்வாகிகள் பெருமாள், கொளஞ்சியப்பன், ராமசாமி ஆகியோா் சந்தித்து மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது:
புதுவை மின் துறையைத் தனியாருக்கு விற்க முயற்சிக்கும் நிலையில், ஸ்மாா்ட் மீட்டா் திட்டம் தனியாா் மயமாக்கலின் முதல் நடவடிக்கையாக உள்ளது. மக்களின் விருப்பம் அறியாமல் திட்டத்தை அமலாக்குவது உரிமையைப் பறிப்பதாக உள்ளது. அவசர கதியில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நிதி நெருக்கடியில் சுமாா் ரூ.400 கோடி கடன் வாங்கி இந்தத் திட்டத்தை அவசரமாக அமல்படுத்த வேண்டுமா? தற்போதுள்ள டிஜிட்டல் மீட்டா் மூலம் 97 சதவிகிதம் வருவாய் ஈட்டும் போது, ஸ்மாா்ட் மீட்டா் தேவையா? எனவே மக்கள் விரோத ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.
இதை மீறி அரசு திட்டத்தை அமலாக்க முயன்றால், அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள் மற்றும் ஒட்டுமொத்த பகுதி மக்களையும் திரட்டி தீவிரமான போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.
