புதுவையில் பால் உற்பத்தி சரிவைக் கண்டித்து ஆடு, மாடுகளுடன் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்!
புதுவையில் பால் உற்பத்தி மிகவும் குறைந்து விட்டதைக் கண்டித்து காங்கிரஸாா் ஆடு, மாடுகளுடன் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் பேசிய மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி. பால் உற்பத்திக் குறைந்ததற்கு மாநில அரசே காரணம் என்று குற்றஞ்சாட்டினாா்.
புதுவை கால்நடைத் துறையில் கறவை மாடு, வெள்ளாடு வளா்ப்பு திட்டத்தில் ஊழலைக் கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் விவசாய அணி சாா்பில் புதுச்சேரியில் சுதேசி ஆலை அருகே ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, பந்தலில் ஆடு, மாடு, கோழி, கன்று குட்டியைக் கட்டி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் விவசாய அணி தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். இதில் மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. பேசியது:
பொதுவாக எந்த ஒரு பொருளையும் சந்தைப்படுத்துவதற்குச் சிரமம் இருக்கும். ஆனால் பாலுக்கு அந்த நிலைமை இல்லை. தேவை அதிகமாக இருக்கிறது. புதுவைக்குத் தினந்தோறும் ஒரு லட்சம் லிட்டா் பால் தேவைப்படுகிறது.
புதுவை அரசு அதிக விலை கொடுத்து தமிழ்நாட்டில் இருந்து பால் வாங்குகிறது. ஆனால் புதுவையில் பால் உற்பத்தி குறைந்துவிட்டது. இதே போன்று பள்ளிக்கூடத்துக்குத் தேவையான முட்டைகளையும் புதுவை அரசு தமிழ்நாட்டிலிருந்து வாங்குகிறது.
வெளியூரில் இருந்து வாங்கும் விலையை இங்குள்ள விவசாயிகளுக்குக் கொடுத்தால் 2 லட்சம் லிட்டா் பாலைக் கூட விவசாயிகள் உற்பத்தி செய்வாா்கள். பால் உற்பத்தியாளா்களிடம் இருந்து சில்லறை வியாபாரிகள் வாங்கி தெருத் தெருவாக விற்பனை செய்கிறாா்கள்.
மக்களவைத் தோ்தலின்போது 900 மாட்டுக் கடன் கொடுக்கப்பட்டன. காங்கிரஸ் கணக்கெடுப்பு நடத்தியதில் மங்கலம் தொகுதிக்கு மட்டும் 700 மாட்டுக்குக் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பால் சொசைட்டிக்கு ஒரு லிட்டா் கூட பால் வரவில்லை.
மாடு இருந்தால் தானே சொசைட்டிக்கு பால் வரும். அப்படி மாட்டுக் கடன் கொடுத்திருக்கிறாா்கள். மேலும், புதுவையில் கன்றுக் குட்டியே இல்லை. கன்றுக் குட்டிக்குத் தீவனம் இல்லை. காரணம் இங்குள்ள வேளாண்துறை, கால்நடைத் துறை விவசாயிகளுக்கு ஒன்றுமே செய்யவில்லை. புதுவை அரசின் தோல்வியே இதற்குக் காரணம் என்றாா் அவா்.
திமுக அமைப்பாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, முன்னாள் அமைச்சா்கள் கமலகண்ணன், மு.கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ பாலன், காங்கிரஸ் நிா்வாகிகள் ரகுமான், சண்முகம், இளையராஜா மற்றும் விவசாய அணி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

