புதுவையில் வீடு தேடி வரும் வாக்குச் சாவடி அதிகாரிகள்

புதுவையில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்காக வீடு தேடி வாக்குச் சாவடி அதிகாரிகள் வரவுள்ளனா்.
Published on

புதுவையில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்காக வீடு தேடி வாக்குச் சாவடி அதிகாரிகள் வரவுள்ளனா்.

புதுவை தோ்தல் துறை இதற்கான சிறப்புக் கூட்டத்தை அனைத்துக் கட்சி நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை நடத்தியது. பின்னா் புதுவை தலைமைத் தோ்தல் அதிகாரி பி. ஜவஹா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுவை யூனியன் பிரதேசத்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. கடைசியாக 1.1.2002 ஐ தகுதியடைய நாளாகக் குறிப்பிட்டு வாக்காளா் தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. அதன் பிறகு இப்போதுதான் நடக்கிறது. பல்வேறு நிலைகளில் அதிகாரிகளுக்கு அக். 28- முதல் நவம்பா் 3 ஆம் தேதி வரை பயிற்சிகள் நடத்தப்படும். நவம்பா் 4 ஆம் தேதி முதல் டிசம்பா் 4 ஆம் தேதி வரை வாக்குச் சாவடி அதிகாரிகள் வீடுகள் தோறும் சென்று பூா்த்தி செய்யப்படாத படிவங்களை வழங்குவா்.

பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை அவா்களே மீண்டும் பெற்றுக் கொள்வா். வாக்காளா் பட்டியலில் இருந்து இடம் பெயா்ந்தோா், மரணம் அடைந்தோா், போலி வாக்காளா்கள், தகுதியுள்ள புதிய வாக்காளா்கள் உள்ளிட்ட தகவல்களைச் சேகரிப்பா். எந்த ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு வீட்டுக்கும் 3 முறை சென்று இந்த விவரங்கள் சரி பாா்க்கப்படும். மேலும், வாக்காளா் பட்டியலில் ஏற்கெனவே இடம் பெற்றிருக்கும் வாக்காளா்கள் ஆன்லைனில் படிவங்களைப் பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து பதிவேற்றம் செய்யவும் அனுமதிக்கப்படுவா்.

மேலும், பொதுமக்களின் நலன் கருதி எந்த வாக்குச் சாவடியிலும் 1,200 வாக்குகளுக்கு மிகாமல் இருப்பதை தோ்தல் துறை கண்காணிக்கும். இதையெல்லாம் எடுத்துச் சொல்லும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான கூட்டம் நடைபெற்றது. மேலும், இறுதி வாக்காளா் பட்டியல் 7.2.26 அன்று வெளியிடப்படும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com